இளம்பெண்ணை மணக்க தடை வாலிபரை குத்தி கொன்ற காதலன்

சிக்கமகளூரு: இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த, அவரது அக்கா கணவரை கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்தார்.

சிக்கமகளூரு மாவட்டம், கொப்பா தாலுகாவின் ஜெயபுரா அருகில் உள்ள தெங்கினமனே கிராமத்தில் வசித்தவர் ராஜேஷ், 27. இவரது மனைவியின் தங்கையை, ஷிவமொக்கா மாவட்டத்தின் மன்டகத்தே கிராமத்தில் வசிக்கும் வருண், 23, ஒருதலையாக காதலித்தார்.

அவரை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி பிடிவாதம் பிடித்தார். இவருக்கு பெண் கொடுக்க, ராஜேஷ் சம்மதிக்கவில்லை. இருவருக்கும் பல முறை சண்டை நடந்துள்ளது.

நேற்று மதியம் பெண் கேட்பதற்காக, தெங்கினமனே கிராமத்துக்கு வருண் சென்றார். இதுபற்றி பெண்ணின் குடும்பத்தினர் ராஜேஷிடம் கூறினர். அவரும் மாமனார் வீட்டுக்கு வந்தார்.

அப்போது ராஜேஷுக்கும் வருணுக்கும் தகராறு ஏற்பட்டது. தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷை குத்திவிட்டு வருண் தப்பியோடினார். படுகாயமடைந்த ராஜேஷ் உயிரிழந்தார்.

ஜெயபுரா போலீசார், வருணை தேடுகின்றனர்.

Advertisement