பண்டிப்பூர் வட்டாரத்தில் 20 புலிகள் நடமாட்டம்

மைசூரு: பண்டிப்பூர், நாகரஹொளே வனப்பகுதியில் 20 புலிகள் சுற்றித்திரிவதாக மைசூரு துணை வன பாதுகாவலர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே வன ப்பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 புலிகள் சுற்றித்திரிகின்றன. இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள், தனியாக செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர். புலியை பிடிக்க ட்ரோன் கேமராக்கள், கும்கி யானைகள் உள்ளிட்டவற்றை வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர்.

வனப்பகுதி ஓரங்களில் வசிப்பவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புலிகள் பயத்தில் இருந்தால் மட்டுமே மனிதனை தாக்கும். புலிகள், மனிதனை உண்ணும் விலங்கு கிடையாது.

புலிகள் தாக்குதலில் இருந்து தப்பிக்க 10,000 மனித முகம் போன்ற தோற்றமளிக்கக்கூடிய அட்டைகளால் செய்யப்பட்ட முகமூடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த முகமூடிகள், வனப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்களுக்கு வனத்துறை விநியோகம் செய்து வருகிறது. இந்த முகமூடியை அணியும் நபர் மீது, புலி பாய்வதற்கு தயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement