கார்த்திகை பிறப்பு; விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள் 'சரண கோஷம்' முழங்க மாலை அணிந்தனர்
- நிருபர் குழு -: கார்த்திகை மாதம் துவங்கியதையடுத்து, பொள்ளாச்சியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் துவங்கினர்.
பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று காலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 5:15 மணிக்கு கணபதி ேஹாமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
காலை, 7:30 மணிக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் தீபாராதனை பூஜை நடந்தது. ஐயப்ப சுவாமி, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதன்பின், காலை, 9:30 மணிக்கு உற்சவ மூர்த்தியான ஐயப்ப சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் கோவிலில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கார்த்திகை மாதத்தையொட்டி தினமும் காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5:15 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு நடைதிறப்பு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
பக்தர்கள் ஆர்வம் சபரிமலைக்கு விரதமிருக்கும் பக்தர்கள், கோவில் வளாகத்தை சுற்றி வந்து, குருசாமிகளிடம் மாலை அணிந்தனர்.சரண கோஷம் பாடி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் கார்த்திகை முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து அபிேஷக பூஜை நடந்தன. அதன்பின் ஐயப்ப பக்தர்கள், குருசாமி தலைமையில் மாலை அணிந்தனர்.
ஐயப்ப பக்தர்கள் வெள்ளிக்கவசத்தை கையில் ஏந்தி கோவிலை வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் அருள்பாலித்தார்.
வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி, மயிலாடும்பாறை ஐயப்பசுவாமி கோவில்களிலும் சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் மாலை அணிந்தனர்.
உடுமலை உடுமலை பகுதிகளில், மாலை அணிவதற்காக, கருப்பு, நீலம், சிவப்பு என சுவாமிக்கு உகந்த நிறங்களில் வேஷ்டி, துண்டு, துாய்மையான துளசி மாலை வாங்கினர்.
உடுமலை ஐயப்பன் கோவில், கணியூர் ஐயப்பன் கோவில்களில் சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களில் அபிேஷகமும், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, குருசாமிகள், விரதம் துவக்கியவர்களுக்கு, துளசி மாலை அணிவித்தனர்.
அதே போல், உடுமலை சுற்றுப்புறங்களிலுள்ள, சிவாலயங்கள் மற்றும் விநாயகர் கோவில்கள் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'சரணம் ஐயப்பா' கோஷம் முழங்க, சபரிமலை யாத்திரைக்காக மாலை அணிந்து, விரதம் துவக்கினர்.