மனித - வனவிலங்குகள் மோதலை தடுக்க... விழிப்புணர்வு ! கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி பட்டறை

பொள்ளாச்சி: வனத்தை ஒட்டிய பகுதியில், மனிதர் வாழும் இடங்களில், வன உயிரினங்களின் வாழ்வியல் தன்மைக்கு ஏற்ப, பொருளாதார வழிமுறைகளையும், வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும், என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர், காற்று உள்ளிட்டவை வனப்பகுதிகளில் இருந்தே கிடைக்கிறது. ஆனால், வன உயிரினங்களை வேட்டையாடுதல், அதன் வாழ்விடங்களை அழித்தல், வழித்தடங்கள் துண்டாக்கப்படுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வன உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன.

குறிப்பாக, வனத்தை ஒட்டிய கிராமங்களில், மனித--வனவிலங்கு மோதல் அதிகரித்துள்ளது. இது, வன உயிரினப் பாதுகாப்பிற்கு மிக பெரிய அச்சுறுத்தலாக மாறியும் வருகிறது.

இவற்றைத் தவிர்க்க, வனத்தை ஒட்டிய பகுதியில், மனிதர் வாழும் இடங்களில், வன உயிரினங்களின் வாழ்வியல் தன்மைக்கு ஏற்ப பொருளாதார வழிமுறைகளையும், வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வரிசையில், பெங்களூரு வனவிலங்கு ஆய்வு மையம் சார்பில், வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் மீதான அச்சுறுத்தல்கள் ஒவ்வொன்றாகக் கண்டறிந்து அவற்றை தவிர்க்கவும், குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை அருகே சேத்துமடை ஆனைமலையகம் அரங்கில் கால்நடை டாக்டர்கள், வனத்துறையினரை உள்ளடக்கிய வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முதுநிலை திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுசாஹீம் கலந்து கொண்டு, வனச்சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு என, பல்வேறு தலைப்புகளில் விளக்கிப் பேசினார்.

அதன்படி, வனம் ஒட்டிய கிராமங்களில், மனிதனின் மேம்பாட்டு திட்டங்களின் செயலாக்கம் வனஉயிரினங்களின் இயல்பான வாழ்வு முறைகளில் முரண் ஏற்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும். இறைச்சிக்காகவும், அதன் உடல் பாகங்களுக்காகவும் வேட்டையாடுதலே வன உயிரின அழிவிற்கு முக்கிய காரணம்.

எனவே, வன உயிரினங்கள் வேட்டையாடுதலை கண்டறிந்து தடுக்க வேண்டும். வனவிலங்குகளால் இடையூறு ஏற்பட்டால், பட்டாசு மற்றும் வெடி வைத்து, விரட்ட முற்படக் கூடாது. மாறாக, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, உரிய வழிகாட்டுதலுடன் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வனவிலங்குகளும் வனமும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தே உள்ளது. இதில், ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும். மத்திய, மாநில அரசுகள் வனவிலங்குளை பாதுகாக்க, தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அதேபோல, சமீபகாலமாக, பாம்பு-- மனித மோதல்களும் அதிகரித்துள்ளன. பாம்பு கடிக்கு ஆளானால், பாம்பை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எந்த மருத்துவமனையில் 'ஆன்டி வெனம்' மருந்து உள்ளது என, தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாம்புகளை கண்டவுடன் அடிக்க முற்படுவதை தவிர்க்க வேண்டும். வனத்துறை, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என, விளக்கப்பட்டது.

இதில், கால்நடை துணை இயக்குனர் சரணவன், உதவி இயக்குனர் சக்ளாபாபு, கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், கால்நடை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் என, 45 பேர் கலந்து கொண்டனர்.

வனவிலங்குகளும் வனமும் ஒன்றுடன் ஒன்று சார்ந்தே உள்ளது. இதில், ஒன்று அழிந்துவிட்டால் மற்றொன்று தானாக அழிந்து விடும். மத்திய, மாநில அரசுகள் வனவிலங்குளை பாதுகாக்க, தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

Advertisement