பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான்

35


சென்னை: பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து மோடி வெற்றி பெற்று விட்டார். தமிழகத்திலும் அதுபோன்று ரூ.15 ஆயிரம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் பல காலமாக போலி வாக்காளர்கள் உள்ளனர். ஏதோ இப்போது மட்டும் போலி வாக்காளர்கள் உள்ளதுபோல் எஸ்ஐஆர் பணிகளை செய்வது ஏன்? பீஹாரை போல் தமிழகத்திலும் தங்களுக்கு வாக்களிக்காத ஓட்டுகளை நீக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு வீட்டின் வரவேற்பரையில் என் படம் இருந்தால் அந்த வீட்டில் இருக்குமா?


இதேபோல் தம்பி விஜய்யின் படம் இருந்தாலும் அந்த வீட்டில் ஓட்டு இருக்காது. நீக்கி விடுவார்கள். எஸ்ஐஆர் பணிகளுகாக திமுகவினர் உடன் செல்லும்போது ஒரு வீட்டில் ஜெயலலிதா படமோ அல்லது எடப்பாடி பழனிசாமி படமோ இருந்தால் அங்கும் ஓட்டு இருக்குமா? பாஜக செல்லும்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வீட்டில் அவர்களுக்கு ஓட்டு இருக்குமா? இப்பொழுது பிரதமர் மோடி பீஹாரில் ரூ.10,000 போட்டார் இல்லையா?


நம்மாள் ரூ.15,000 கூட போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நமது அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும். பீஹார் பார்முலாவை பின்பற்றி, அவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு கொடுக்க வேண்டியதுதானே? ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இன்னும் ஒரு ரெண்டு லட்சம் கோடியை கடனாக்கி விட்டு போக வேண்டியது தானே? இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement