பெங்களூரு கடலைத் திருவிழா



பசவனகுடியை உற்சாகமாக்கும் பாரம்பரிய கொண்டாட்டம்

கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், பெங்களூரின் பாரம்பரியத்தையும் விவசாய மரபையும் ஒருங்கே கொண்டாடும் கடலைத் திருவிழா இந்த ஆண்டும் பசவனகுடி பகுதியில் ஆனந்தமாகத் தொடங்கியுள்ளது.
Latest Tamil News
நந்தி கோவில் சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் இந்த விழா, நகரின் பழமையான திருவிழாக்களில் ஒன்றாகவும், ஆயிரக்கணக்கான பயணிகளையும் விருந்தினர்களையும் ஈர்க்கும் நிகழ்வாகவும் திகழ்கிறது.

அடிப்படையில் இது கடலையின் முதல் அறுவடை கொண்டாட்டம். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் முதல் அறுவடை கடலையை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். விற்பனைக்கு முன் அவர்கள் அந்த கடலையை நந்தி பகவானுக்கு சமர்ப்பிப்பது இந்த விழாவின் முக்கிய மரபாகும்.
Latest Tamil News
ஒருகாலத்தில் இந்தப் பகுதி முழுவதும் கடலைப் பயிரிடும் வயல்களாக இருந்தன. பயிர்களை அழிக்கும் காட்டு மிருகங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற, விவசாயிகள் நந்தி பகவானை வேண்டிக் கொண்டார்கள்; அந்த வேண்டுதல் நிறைவேறியது என நம்பப்படுவதால், முதல் அறுவடை கடலையை நந்திக்கு சமர்ப்பிக்கும் மரபு உருவானது.

அப்போது தொடங்கிய இந்த வழக்கம் வருடாந்திர திருவிழாவாக வளர்ந்து இன்று நகரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாகியுள்ளது. விழா பொதுவாக கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை ஒரு நாள் நடைபெற்றாலும், நாளடைவில் கடலையை மையமாக வைத்து பிற பொருட்களும் சந்தைப்படுத்தப்படத் தொடங்கியதால், இப்போது ஐந்து நாட்கள் நடைபெறும் பெரிய திருவிழாவாக மாறியுள்ளது. இந்த ஐந்து நாட்களிலும் கலை விழாக்கள், உணவு சந்தை, பொருட்காட்சி போன்றவை நடைபெற்று, பசவனகுடி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
Latest Tamil News
வறுத்த கடலை, அவித்த கடலை, பச்சைக் கடலை என பலவிதமான கடலை வகைகள் இங்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும். விவசாயிகள் தங்கள் அறுவடையை நேரடியாக விற்பனை செய்து நல்ல வருமானம் பெறுகின்றனர். இது விவசாயமும் நகர வாழ்வும் ஒன்றுக்கொன்று இணையும் ஒரு முக்கிய சமூக பாலமாகப் பார்க்கப்படுகிறது.
Latest Tamil News
மொத்தத்தில், பெங்களூரு கடலைத் திருவிழா என்பது வெறும் சந்தை அல்ல; அது பாரம்பரியம், பக்தி, விவசாயம், கலாச்சாரம் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் இனிமையான திருவிழா.

— எல். முருகராஜ்

Advertisement