பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பு நடவடிக்கை கூடாது: ஜெய்சங்கர்


மாஸ்கோ: '' பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பான நடவடிக்கை இருக்கக்கூடாது. அதனை கண்டும் காணாமல் இருக்கக்கூடாது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்த்து போராடுவதற்காக தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு துவங்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த அச்சுறுத்தல் இன்னும் தீவிரம் அடைந்துள்ளன. எந்த வடிவில் பயங்கரவாதம் வந்தாலும் அதனை சகித்துக் கொள்ளக்கூடாது. அதற்கு எந்த நியாயமும் கற்பிக்கப்படக்கூடாது. கண்டு காணாமல் இருக்கக்கூடாது. கண்துடைப்பு நடவடிக்கை கூடாது.

இந்தியா செய்து காட்டியது போல், பயங்கரவாதத்துக்கு எதிராக நமது மக்களைப் பாதுகாக்க நமக்கு உரிமை உண்டு. அதை செயல்படுத்துவோம். மாறி வரும் உலகளாவிய நிலப்பரப்புக்கு ஏற்ப ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை மாற்றியமைப்பதுடன் அதனை விரிவுபடுத்த வேண்டும். அதன் செயல்பாட்டு முறைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியா நம்புகிறது. இதற்கு ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்குவதுடன், நேர்மறையான பங்களிப்பு அளிப்போம்.

பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பொருத்தமானவை. கலாசாரத்தைப் பொறுத்தவரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடனான இந்தியாவின் உறவு நீண்டகாலமாக இருக்கிறது.

இந்த அமைப்பை நவீனமயமாக்க வேண்டும். இதனை சீர்திருத்தம் செய்ய இந்தியா ஆதரவு தெரிவிக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் மையங்களை இந்தியா வரவேற்கிறது. சமகால மாற்றங்களுடன் இந்த அமைப்பு செயல்பட வேண்டும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement