ஆதாரம் இல்லை; ஆனால் நடந்தது மோசடிதான்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

14

பாட்னா: பீஹார் தேர்தலில் மோசடி நடந்துள்ளது. ஆனால் தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக, பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: பீஹார் தேர்தல் ஓட்டுப்பதிவில் மோசடி நடந்துள்ளது. இருப்பினும் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை. தனது ஜன் சுராஜ் கட்சியின் தோல்வி அதிர்ச்சிகரமானது. ஜன் சுராஜ் கட்சி பிரசார களத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. நாங்கள் சேகரித்த ஓட்டிற்கும், தேர்தல் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது. ஏதோ தவறு நடந்துள்ளது.


தேர்தல் முடிவை மாற்றுவதற்காக, பீஹாரில் ஆயிரக்கணக்கான பெண் வாக்காளர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பணம் விநியோகித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை, பெண்களுக்கு ஆரம்ப தவணையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தேஜ கூட்டணி மற்றும் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஓட்டளித்தால் கூடுதலாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.


இந்தியாவின் வேறு எங்கும் இந்த அளவுக்கு பணம் விநியோகித்த ஒரு அரசை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. லாலு பிரசாத் யாதவின் காட்டு ராஜ்ஜியம் குறித்த நீடித்த பயம் காரணமாக தேஜ கூட்டணிக்கு மக்கள் ஓட்டளித்து விட்டனர். பல வாக்காளர்கள் தனது கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதினர். தனது கட்சிக்கு ஓட்டளிப்பது தான் காரணமாக, லாலுவின் ஆட்சி மீண்டும் வருவதற்கு உதவும் என்று அஞ்சினர். இதனால் ஜன் சுராஜ் கட்சிக்கு மக்கள் பெரிதளவு ஆதரவு தரவில்லை. தனது அரசியல் வாழ்க்கை முடிந்து விடவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.

Advertisement