சென்னை போலீஸ்காரரிடம் ரூ.60 லட்சம் கொள்ளை திருச்சி ரயில்வே போலீசார் உட்பட 4 பேர் கைது

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில், சென்னை போலீஸ்காரரிடம், லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று கூறி, 60 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த இரண்டு ரயில்வே போலீசார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள வளையம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி. இவர் சென்னை மாநகர போலீசில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

சொந்த ஊரில் நிலம் வாங்க, 60 லட்சம் ரூபாய் பணத்துடன், அக்., 30ம் தேதி, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்துள்ளார்.

திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கிய கென்னடியை, இருவர் பிடித்து, தங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்று கூறி, அவர் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துள்ளனர். பின், 'நாங்கள் அழைத்ததும் லஞ்ச ஒழிப்பு அலுவலகம் வரவேண்டும்' என்று கூறிவிட்டு, பணத்துடன் சென்று விட்டனர்.

தேடி வந்தனர் நாட்கள் கடந்தும், தகவல் ஏதும் வரவில்லை என்பதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கென்னடி, திருச்சி ரயில்வே போலீசில் நவ., 21ம் தேதி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிந்து, பணத்தை பறித்து சென்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பணம் பறித்துச் சென்றது, திருச்சி ரயில்வே போலீசார் ஜான்சன் கிறிஸ்டோ குமார், 43, தீனதயாளன், 36, என, ரயில்வே ஸ்டேஷன் கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை மூலம், தெரிந்தது.

அவர்களை பிடித்து விசாரித்ததில், தங்களின் நண்பர்கள், நவலுார் குட்டப்பட்டுவை சேர்ந்த ரஞ்சித், ராஜேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து, 60 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்ததாக ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து, நால்வரையும் திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர். ஜான்சன் கிறிஸ்டோ குமார், தீனதயாளன் ஆகிய இருவரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

போலீசார் கூறியதாவது:

ராஜேந்திரன், ரஞ்சித் இருவரும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள். இருவரும், நிலம் வாங்கி கொடுத்த வகையில், ஆரோக்கிய ஜான் கென்னடிக்கு அறிமுகம் ஆனவர்கள்.

தற்போது இருவர் மூலம் நிலம் வாங்குவதற்காகவே, கென்னடி பணத்துடன் சென்னையில் இருந்து திருச்சி வந்துள்ளார். தான் பணம் கொண்டு வரும் தகவலை, ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார். இதில், புரோக்கர்கள் இருவரும் ஜான் கிறிஸ்டோ குமாரின் ஊரை சேர்ந்தவர்கள். நண்பர்களாகவும் பழகி உள்ளனர்.

விசாரணை ராஜேந்திரன் அளித்த தகவ லில், கிறிஸ்டோ குமார், தன்னுடன் பணியாற்றும் மற்றொரு போலீஸ்காரரான தீனதயாளன் என்பவருடன் சேர்ந்து, கென்னடியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று கூறி பணத்தை கொள்ளையடித்து உள்ளனர்.

ஆரோக்கிய ஜான் கென்னடி, சென்னையில் ஐ.ஜி., ஒருவருக்கு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது; உண்மையில் நிலம் வாங்க வந்தாரா அல்லது பினாமி பணமா என்ற கோணங்களிலும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement