சாலை விபத்தில் ஒரே வாரத்தில் 5 பேர் பலி போலீசார் நடவடிக்கை தேவை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள கீழம்பி மற்றும் அதை சுற்றிய பகுதியில், ஒரே வாரத்தில், இருசக்கர வாகனங்களில் சென்ற 4 வாலிபர்கள் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். கீழம்பி பகுதியில் விபத்துகளை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் குளோரி,38. இவரது கணவர் ஏற்கனவே இறந்த நிலையில், யுவராஜ்,18, மற்றும் சந்தோஷ்,16, என இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். மூத்த மகன் தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டும், இளையமகன் பிளஸ் 1 வகுப்பும் படித்து வந்தனர்.
கீழம்பி அருகே செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் சந்தைக்கு, குளோரி, யுவராஜ், சந்தோஷ் ஆகிய மூவரும், ேஹாண்டா யூனிகார்ன் இருசக்கர வாகனத்தில், கடந்த 18 ம் தேதி இரவு சென்றனர்.
இருசக்கர வாகனத்தை யுவராஜ் ஓட்டியுள்ளார். அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம், இருசக்கர வாகனம் வேகமாக மோதியுள்ளது. இதில், தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த சகோதரர்கள் யுவராஜ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த விபத்து நடந்த மறுநாளே, அஜய் , 19, என்ற வாலிபர், கீழம்பியிலிருந்து பாலுச்செட்டிச்சத்திரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லாரியின் பின்பக்கம் மோதி இறந்தார்.
அன்றைய தினம் இரவு 10:45 மணிக்கு, தனுஷ்,21, என்ற வாலிபர் குண்டுகுளத்திலிருந்து வெள்ளைகேட் நோக்கி சென்றபோது, கார் மோதி இறந்தார். கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கவிதா, 40 என்ற பெண், தமிழரசி என்பவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு, கீழம்பி அருகே, 14 ம் தேதி சென்றபோது, கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
கீழம்பி பகுதியிலும் அதை சுற்றிய இடத்திலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 4 வாலிபர்கள் உட்பட 5 பேர் இருசக்கர வாகன விபத்தில் பலியாகி உள்ளனர்.
இப்பகுதியில், பாலுச்செட்டிச்சத்திரம், பொன்னேரிக்கரை ஆகிய இரு காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை இப்பகுதியில் செல்வதால், சாலை பாதுகாப்பு நடைமுறைகளை போலீசார் கண்காணிக்க வேண்டும். கீழம்பி-செவிலிமேடு புறவழிச்சாலையின் ஓரங்களில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.
சாலையும் மோசமாக உள்ளதால், இரவில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ஒளி எதிரொலிக்கும் கருவிகளையும், ஸ்டிக்கர்களையும், எச்சரிக்கை பலகைகளும் கீழம்பி சுற்றிய இடங்களில் வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒரே வாரத்தில் 5 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, போலீசார் முன்னெரிச்சரிக்கை பணிகளை செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
பயங்கரவாத டாக்டர்களிடம் வாடகை பாக்கியை வாங்கி தரும்படி போலீசிடம் கெஞ்சிய மத போதகர்
-
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு
-
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்
-
பூட்டப்பட்டுள்ள கழிப்பறை மீண்டும் திறக்க எதிர்பார்ப்பு
-
வெளிநாடுகளில் ஆதரவு திரட்டிய ஹமாஸ் முறியடித்ததாக இஸ்ரேல் புது தகவல்
-
கடப்பாக்கம் மீன் அங்காடி கட்டடம் சீரமைத்து செயல்படுத்த எதிர்பார்ப்பு