பயங்கரவாத டாக்டர்களிடம் வாடகை பாக்கியை வாங்கி தரும்படி போலீசிடம் கெஞ்சிய மத போதகர்

ஸ்ரீநகர்: டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாத டாக்டர்களிடம் இருந்து வீட்டு வாடகை பாக்கியை வாங்கித் தரும்படி, கைதான ஹரியானா மத போதகர் இஷ்தியாக், போலீசாரிடம் கெஞ்சிய தகவல் தெரிய வந்துள்ளது.

டில்லி செங்கோட்டையில் சமீபத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில், பல டாக்டர்கள் இருப்பதும், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த டாக்டர்கள், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலை அருகே, வாடகை வீட்டில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தனர்.

அந்த வீட்டை இவர்களுக்கு வாடகைக்கு விட்ட மத போதகர் மவுல்வி இஷ்தியாக் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹரியானாவின் மேவாத் பகுதியைச் சேர்ந்த இவரை, ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்று ஜம்மு - காஷ்மீர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையின் போது, அதிகாரிகளே அதிர்ச்சி அடையும் வகையில் வேறு விதமான தகவலை மவுல்வி இஷ்தியாக் கூறியுள்ளார். டாக்டர்கள் முஸம்மில், உமர் ஆகியோர் உரங்களை பாதுகாப்பாக வைக்க வீட்டை வாடகைக்கு கேட்டதாகவும், மாதம் 2,500 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கான வாடகையை ஆறு மாதங்களாக இருவருமே தரவில்லை என்றும், அதை நம்பியே தன் குடும்பம் இருப்பதால், வாடகை பாக்கியை முஸம்மிலிடம் இருந்து பெற்று தரும்படியும் அதிகாரிகளிடம் இஷ்தியாக் கெஞ்சி உள்ளார். அவரை ஹரியானா போலீசாரிடம் ஒப்படைக்க ஜம்மு - காஷ்மீர் போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

@block_B@ சமூக ஊடகங்கள் மூலம் மூளைச்சலவை போலீசார் மேலும் கூறியதாவது: டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி உள்ள டாக்டர்கள் முஸம்மில் கனி, ஆதில் ராதர் உள்ளிட்டோரை, 2019ல், 'பேஸ்புக், எக்ஸ்' போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பாக்., மற்றும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களை மூளைச்சலவை செய்த பயங்கரவாதிகள், 'டெலிகிராம்' சமூக ஊடகத்தில், சதித்திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளனர். துவக்கத்தில், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற மோதல் பகுதிகளில் உள்ள பயங்கரவாத குழுக்களில் சேர டாக்டர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களை மூளைச்சலவை செய்த பயங்கரவாதிகள், இந்தியாவில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தும்படி அறிவுறுத்தினர். 'யு டியூப்' சமூக ஊடகத்தை பயன்படுத்தி, சக்திவாய்ந்த மேம்பட்ட வெடிகுண்டுகளை தயாரிப்பது குறித்து டாக்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.block_B

Advertisement