புதிய தொழிலாளர் சட்டம் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் கடந்த 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

இந்திய கம்யூ., மாநில துணைச் செயலாளர் ரவி, ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

'புதிய தொழிலாளர் சட்டங்களால், தொழிலாளர் நல வாரியங்கள் சீர்குலைக்கப்படும்; சமூக பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். தொழிற்சங்கங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. எவ்வித காரணமும் சொல்லாமல், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் முழு சுதந்திரமும் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது,' என கூறி, கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement