மாணிக்கம்பட்டி தெருவில் தேங்கும் கழிவுநீரால் அவதி

பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் மாணிக்கம்பட்டியில் வடிகால் வசதி இன்றி தெருக்களில் தேங்கும் கழிவுநீரால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

இந்த ஊராட்சியின் பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிழக்கு பகுதியில் உள்ள 4 தெருக்கள் வழியாக தனியார் தோப்பில் விடப்பட்டது.

சில மாதங்களுக்கு முன் உரிமையாளர் தனது பகுதியில் அடைத்து விட்டதால், கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லாமல் உள்ளது என கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சுதாகரன், பழனியம்மாள், ராதிகா கூறியதாவது: இங்கு கழிவுநீர் மாதக் கணக்கில் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதாரம் பாதிக்கிறது.

தாழ்வான பகுதி வீடுகளின் முன்பு கழிவுநீர் தேங்கவிடாமல் மண், ஜல்லிக் கற்களை கொட்டியதால் வடிகால் பகுதி மூடிவிட்டது.

மழைநேரம் மற்ற வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து பாதிக்கிறது. சிலர் வாசல் படிகளை கற்களை வைத்து உயர்த்திக் கட்டி கழிவுநீரை தடுத்துள்ளனர்.

பழமையான வீடுகளின் சுவர்கள் பாதித்துள்ளது. மழையின் போது தேங்கும் நீரால் மக்கள் தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை.

புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. வருவாய்த் துறையினர் பாசன வாய்க்காலை அளவீடு செய்தும், கழிவுநீர் செல்ல வடிகால் வசதி செய்தும் தர வேண்டும். கிழவிகுளம் வரை கழிவுநீர் செல்ல வடிகால் கட்டித்தர வேண்டும் என்றனர்.

Advertisement