வரத்து குறைவால் மல்லிகை பூ கிலோ ரூ.1800க்கு விற்பனை

தேனி: தேனி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ வரத்து குறைவால் கிலோ ரூ.1800 வரை விற்பனையானது. ஜாதிமல்லி வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ.300க்கு விற்பனையானது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை, பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் தேனி பூ மார்க்கெட்டிற்கு மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.1800 என, விற்பனையானது.

நேற்று முன்தினத்தை விட நேற்று பூக்களின் விலை குறைந்து காணப் பட்டது.

தேனியில் நேற்று கிலோ முல்லை ரூ. 800, கனகாம்பரம் ரூ.500, ஜாதி மல்லி 300, செவ்வந்தி ரூ.200, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.150, பட்டன்ரோஸ் ரூ.400, பன்னீர் ரோஸ் ரூ.150, துளசி கிலோ ரூ.30, செண்டு பூ ரூ.50க்கு விற்பனையானது.

பூ வியாபாரி கண்ணன் கூறியதாவது: சீசன் நேரங்களில் மல்லிகை பூ ஒரு டன்னுக்கு மேல் விற்பனைக்கு வரும்.

தற்போது சீசன் இல்லாததாலும், மழை,பனி பெய்வதால் அதிகபட்சம் 15 கிலோ வரை மட்டும் விற்பனைக்கு வருகிறது.

இதனால் மல்லிகை விலை உயர்ந்துள்ளது. அதே நேரம் ஜாதிப்பூ ஒரு டன் வரை தற்போது வரத்து உள்ளது. இதனால் பலரும் ஜாதிப்பூ விரும்பி வாங்கிச் செல்கின்றனர்., என்றார்.

Advertisement