மது என்னும் விஷத்தை கொடுத்து நலத் திட்டமா: சீமான் கேள்வி

புதுச்சேரி: 'எஸ்.ஐ.ஆரில் காட்டும் ஆர்வத்தை, ஜாதி வாரி கணக்கெடுப்பு பணியில் காட்ட தமிழக அரசு முன்வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

புதுச்சேரி, வில்லியனுாரில் நடந்த, நாம் தமிழர் கட்சியின் கடலுார் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், கூறியதாவது:

வரும் பிப். 7ம் தேதி நடக்கும் கட்சி மாநாட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடக்கிறது.

ஏனாம், மாஹே தொகுதியில் போட்டி இல்லை. மாநில உரிமை வேண்டும் என்பதால், புதுச்சேரியில் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். புதுச்சேரியில் மதுவை நம்பியே ஆட்சி உள்ளது. விஷத்தை கொடுத்து நலத் திட்டத்தை செய்கின்றனர். புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவை ஒழிப்போம்.

மாநிலத்தில் கிடைக்கும் வளத்தை அவரவரே எடுத்துக் கொண்டால், இந்தியாவில் எப்படி ஒருமைபாடு ஏற்படும். கர்நாடகவில் அணை கட்டக்கூடாது என, பா.ஜ.,வால் கூற முடியுமா? மேகதாது அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசு ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனாலும், ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.

தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர்., மூலம் பீஹாரில் 81 லட்சம் ஓட்டுகளை நீக்கியது. அதன் வாயிலாகவே பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களை கொண்டு எஸ்.ஐ.ஆர்., பணி துவங்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்காளர்கள் கண்டிப்பாக நீக்கப்படுவர். எஸ்.ஐ.ஆரில் காட்டும் ஆர்வத்தை, ஜாதி வாரி கணக்கெடுப்பு பணியில் காட்ட, தமிழக அரசு முன்வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு சீமான் கூறினார்.



@block_B@ நிருபரை ஒருமையில் பேசிய சீமான் மீது போலீசில் புகார் புதுச்சேரியில் சீமான் அளித்த பேட்டியின் போது, தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும் எஸ்.ஐ.ஆர்., பணி குறித்து, தனியார் டிவி நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், அவரை, ஒருமையில் பேசினார் சிமான். தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற்றிய நிருபரை, அவரது கட்சியினர் தாக்கியதை கண்டித்து, புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அடையாளம் தெரியாத கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வில்லியனுார் போலீசில் புகார் அளித்தனர்.block_B

Advertisement