பெண்களை காக்க உயிர் நீத்த வீரனின் நடுகல் கண்டெடுப்பு

தர்மபுரி: தர்மபுரி அருகே பெண்களை காக்க போரிட்டு உயிர் நீத்த வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

யாக்கை மரபு அறக்கட்டளையை சேர்ந்த சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி உள்ளிட்ட குழுவினர், நவலை கிராமத்தில் நடத்திய தொல்லியல் கள ஆய்வில் ஒரு நடுகல்லை கண்டெடுத்தனர்.

கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த அந்த நடுகல்லை, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குநர் முனிரத்தினத்துக்கு அனுப்பினர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்த நடுகல், 9, 10ம் நுாற்றாண்டை சேர்ந்தது. நொளம்ப மன்னர் வீர நொளம்பர், பவினுாரில் ஆட்சி செய்த காலத்தில், புலியண்ணனின் மகனான பிருதுவன் என்ற வீரன், எதிரியுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தது குறிப்பிடப்பட்டுள்ளது' என்றார்.

குமரவேல் ராமசாமி கூறுகையில், ''அரிய வகையான இந்த நடுகல்லில், வீரன் தன் மார்பில் அம்பு பட்டு வில்லேந்தி நிற்கிறார். வீரனின் வலதுபுறம், பெண்கள் உள்ளனர். இரு பெண்கள் கவரி வீசுகின்றனர். அதாவது, பெண்களை காக்க, உயிர் நீத்த வீரர் சொர்க்கம் சென்றதை அடையாளப் படுத்துகிறது,'' என்றார்.

Advertisement