முடிவை நோக்கி நகருகிறது உக்ரைன் போர்: டிரம்புடன் மீண்டும் பேசுகிறார் புடின்

மாஸ்கோ: உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வரும் அதே சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் வெகு விரைவில் பேசுவார்கள் என்று கிரெம்ளின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறிய டிரம்பின் கூற்று உறுதியாகி இருக்கிறது.




ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ராஜதந்திர முயற்சிகள்
தொடர்ந்து வருகின்றன. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.



சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, 20 அம்சங்கள் கொண்ட போர்
நிறுத்த ஒப்பந்தத்தில் 90 சதவீதம் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அமைதி ஏற்பட நாங்கள் தயாராக உள்ளோம் என்று அறிவித்தார்.



இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்ற டிரம்ப் கூற்றை ஏற்றுக் கொள்வதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது; அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புடினும் மிக விரைவில் தொலைபேசியில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மோதலை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன என்ற டிரம்ப் கூறியதை மாஸ்கோ ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வாறு டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

Advertisement