கோரிக்கை நிறைவேறும்! நகராட்சி கமிஷனர் உறுதி

பல்லடம்: பல்லடம் தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், என்.ஜி.ஆர். ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாரச்சந்தை நடைபெறும் திங்கள் கிழமைகளில், வெளியூர் வியாபாரிகள் பலர், ரோட்டை ஆக்கிரமித்து தள்ளுவண்டி மற்றும் வாகனங்களில் வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் வியாபாரிகளுக்கென, குடிநீர், பார்க்கிங் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

இதுதவிர, அரசு அறிவித்த கொரோனா கால வாடகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. பழைய கடைகளுக்கு செலுத்திய அட்வான்ஸ் தொகை திருப்பி வழங்கப்படவில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை முன் வைத்தும், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம் போலீசார், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, நகராட்சி கமிஷனர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என்றும், இல்லாவிடில், பல்லடத்துக்கு முதல்வர் வரும்போது, கடைகளை அடைத்து, கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினர்.

தொடர்ந்து காத்திருந்த வியாபாரிகளை, மதியம், 3.30 மணிக்கு நகராட்சி கமிஷனர் அருள் சந்தித்தார். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் உறுதி அளித்தார். இதனால், வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement