கிறிஸ்துமஸ் அன்று போர் நிறுத்தக் கோரிக்கை நிராகரிப்பு; ரஷ்யாவின் செயலால் போப் 14வது லியோ வேதனை

11

ரோம்: கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது வேதனை அளிப்பதாக போப் 14வது லியோ தெரிவித்துள்ளார்.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.


இதனிடையே, நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒருதினம் மட்டும் போர்களை நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று போப் 14வது லியோ கோரிக்கை விடுத்தார். ஆனால் போப்பின் இந்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது.


இதனால், வேதனை அடைந்த போப் 14வது லியோ ரோமிற்கு அருகே உள்ள காஸ்டல் கண்டால்போ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது; கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது எனக்கு வேதனையளிக்கிறது.


எங்கள் கடவுளின் பிறந்த நாளில் குறைந்தபட்சம் ஒருநாளாவது, சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன். இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உலகம் முழுவதிலும் 24 மணிநேர சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.


இந்த மாதத்தின் துவக்கத்தில் போப் 14வது லியோ உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு வருமாறு போப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், " இது எப்போது சாத்தியமாகும் என்று சொல்ல முடியாது," என்று போப் 14வது லியோ பதிலளித்திருந்தார்.

Advertisement