வால்வோ அரசு 'ஏசி' பஸ்களில் ஒரு மணி நேர பயணம் குறையும்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் துவக்கப்பட்டுள்ள, புதிய வால்வோ 'ஏசி' பஸ்களில், நீண்ட துார பயணத்தில், ஒரு மணி நேரம் குறைந்துள்ளது.

இது குறித்து, விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு, 34.30 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட, 20 'வால்வோ ஏசி' பஸ்களின் சேவை, சென்னையில் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்துார், கோவை, திருப்பூர், பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.

முதல் நாளிலேயே, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து பஸ்களிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு, டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. வழக்கமாக செல்லும், விரைவு சொகுசு பஸ்களை காட்டிலும், வால்வோ 'ஏசி' பஸ்கள் செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் அனைத்தும், நெடுஞ்சாலை வழியாக மட்டுமே செல்லும். அதையொட்டி அமைந்துள்ள முக்கிய பஸ் நிலையங்களுக்கு மட்டுமே செல்லும்.

குறிப்பாக, விழுப்புரம் உள்ளே செல்லாது. இதனால், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கோவை செல்லும் வால்வோ 'ஏசி' பஸ்களில், ஒரு மணிநேரம் வரை பயண நேரம் குறைந்துள்ளது. விரைவு பஸ்களை, பாதுகாப்பாக இயக்க வேண்டும் என, ஓட்டுநர்களிடம் தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement