'தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு'; அண்ணாமலை பேட்டி

7

கோவை: ''தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை இலக்கு,'' என, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.


கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கை மற்றும் ஆட்சியின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு, கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர்., அரங்கில் நேற்று நடந்தது.


கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூகப்பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு, நல்லாட்சி விருதுகளை வழங்கி பேசினார்.



தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மை காலமாக அரசு பஸ்கள் விபத்திற்கு உள்ளாகின்றன. அரசு பஸ்களை சோதித்து தரசான்று வழங்க வேண்டும். தமிழக தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும் என்பது பின்னால் தான் தெரியும். அனைவரும் நல்ல முடிவெடுப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை பார்த்து வருகிறோம்.


தி.மு.க., ஆட்சி முடியும் நேரத்தில் உள்ளது. அவர்கள் இன்னும், 100 நாட்கள் தான் ஆட்சியில் இருப்பார்கள். அனைத்து மத பண்டிக்கைக்கும் பிரதமர் வாழ்த்து கூறுகிறார். ஆனால், முதல்வர் கிறிஸ்துவர், முஸ்லிம் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து கூறுகிறார். இதில் இருந்து மத அரசியல் செய்வது யார் என்பது தெரியும்.


யார் என்ன அரசியல் செய்கின்றனர் என, தமிழக மக்களுக்கு தெரியும். தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை இலக்கு. பா.ஜ., பூத் கமிட்டியை வலிமைப்படுத்தி உள்ளோம். போலீசார், மிகப்பெரிய மனஉளைச்சலில் உள்ளனர். அந்த துறையிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement