புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலை

17

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து இன்று (டிசம்பர் 27) விடுதலை செய்யப்பட்டார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 13ம் தேதி போலீசார் அவரது வீட்டில் கைது செய்தனர். சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்குமாறு, அவரது தாய் கமலா மனு தாக்கல் செய்திருந்தார்.




இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. வசிக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், சவுக்கு சங்கருக்கு 2026ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.




இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

விளாசிய நீதிமன்றம்



நேற்றைய தீர்ப்பில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களுக்கு பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமை. சட்டசபையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.

தலையீடு



ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமையும்.




நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கவனத்தில் கொண்டும், சிறைக்கைதியின் மருத்துவ நிலை மற்றும் அவரது சுதந்திரம் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டு ஜாமினில் விடுவிக்க தயாராக உள்ளது. 2026 மார்ச் 25 ம் தேதிக்கு முன்னர் அவர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்.

மன உளைச்சல்



அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் குடிமக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது. அதிகாரிகளின் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement