சர்வதேச நகரத்துக்கு திட்ட அறிக்கை பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தமிழக அரசு உருவாக்க உள்ள சர்வதேச நகரத்துக்கு, முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு, தனியார் நிறுவனம் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், 2,000 ஏக்கரில் குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை போன்றவற்றை உள்ளடக்கிய, சர்வதேச நகரை, அரசு உருவாக்க உள்ளது. இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.

சர்வதேச நகரம் அமைப்பதற்கு, முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கான ஆலோசகரை நியமிக்க, கடந்த செப்டம்பரில் டெண்டர் கோரப்பட்டது.

நான்குக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், 'நிப்பான் கோய்' என்ற தனியார் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, 'டிட்கோ' நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் செயல்முறையில் உள்ளது. இன்னும் முடிவடையவில்லை,'' என்றார்.

Advertisement