மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளால் ஆறு பேருக்கு வாழ்வு

தானே: மஹாராஷ்டிராவில், மூளைச்சாவு அடைந்த, 38 வயதான பெண்ணின் இதயம், நுரையீரல் உட்பட முக்கிய உடல் உறுப்புகள் மூலம் ஆறு பேருக்கு வாழ்வளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த 19ம் தேதி, அப்பெண்ணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தானேவில் உள்ள ஸ்ரீ மஹாவீர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, டாக்டர்கள் பரிசோதித்ததில், அப்பெண் மூளைச்சாவு அடைந்ததை கண்டறிந்தனர்.

அந்த பெண்ணின் இதயம், நுரையீரல், கணையம் உட்பட முக்கிய உறுப்புகள் செயல்பட்டு வந்ததால், அவற்றை தானம் அளிக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

இதையடுத்து, குடும்பத்தினரின் அனுமதியுடன், அப்பெண்ணின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, கடந்த 25ம் தேதி மும்பையில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கும், ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.

உடல் உறுப்புகளை, பத்திரமாகவும், விரை வாக எடுத்துச்செல்லவும் போக்குவரத்து ஏற்பாடுகளையும் போலீசார் மேற்கொண்டனர்.

இதன் காரணமாக, அந்தந்த மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் கொண்டு சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. இதன்மூலம் ஆறு பேருக்கு வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, உடல் உறுப்புகள் தானம் அளித்த அக்குடும்பத்தினரின் செயலால் நெகிழ்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகமான மஹாவீர் ஜெ யின் அறக்கட்டளை, இறந்த பெண்ணின் 9 வயது மகளுக்கு 1 லட்சம் ரூபா ய் நிதியுதவி அளித்தது.

இதுதவிர, மருத்துவமனை சார்பில் மேலும் 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisement