நாமக்கல்லில் 'சிப்காட்' தொழில் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்

சென்னை: நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், 803 ஏக்கரில் உருவாக்கப்பட உள்ள தொழில் பூங்காவுக்கான மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது.

தமிழகத்தில் தொழில் துவங்கும் பெரிய நிறுவனங்கள், ஆலை அமைக்க வசதியாக சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, சிப்காட் நிறுவனம் அமைக்கிறது.

இந்நிறுவனம், தற்போது, 24 மாவட்டங்களில், எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி, 50 தொழில் பூங்காக்களை அமைத்துள்ளது. அவற்றில், 3,400 நிறுவனங்கள் ஆலைகளை அமைத்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், 10,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மோகனுார் தாலுகாவில் என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர் ஆகிய கிராமங்களை சுற்றி, 803 ஏக்கரில் தொழில் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.

இந்த பூங்காவில் உள்ள மனைகள், இன்ஜினியரிங் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

தற்போது, அந்த பூங்காவில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளது. அனுமதி கிடைத்ததும், தொழில் பூங்கா உருவாக்கும் பணி துவங்கப்பட உள்ளது.

Advertisement