கோல்கட்டாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து; சென்னையைச் சேர்ந்த நபர் கைது

2

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 38 வயது பெண்ணை கத்தியால் குத்திய சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது;நேற்றைய தினம் (டிசம்பர் 28) மாலை 4.15 மணியளவில் கோல்கட்டாவின் பி.பி. கங்குலி வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிகளவு ரத்தம் வெளியேறியுள்ளது.

இதையடுத்து, வடக்கு 24 பர்கனாஸ் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 38 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார் செல்வராஜ்,40, கைது செய்யப்பட்டுள்ளார். கத்தியால் குத்தப்பட்டதற்கான காரணம் தெரியாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது, என்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2023ல் இந்தியாவில் 15 முதல் 49 வயதுடைய ஐந்தில் ஒரு பெண்கள் தங்களின் நெருக்கமானவர்கள் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 30% பேர் வாழ்நாள் முழுவதுமான பாதிப்பை சந்தித்துள்ளனர். உலகளவில், மூன்றில் ஒரு பெண், அல்லது சுமார் 84 கோடி பேர், தங்களின் பார்ட்னர்கள் அல்லது பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2000ம் ஆண்டு முதல் மாறாமல் இருந்து வருகிறது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement