பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது; உத்தரகண்ட் சம்பவத்திற்கு ராகுல் கண்டனம்

5

டேராடூன்:உத்தரகண்டில் மர்ம கும்பலால் திரிபுராவை சேர்ந்த பழங்குடியின மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின், உனகோடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளைஞர் அஞ்சல் சக்மா, 24. இவரது சகோதரர் மைக்கேல் சக்மா. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்கள் உத்தரகண்டில் படித்து வந்தனர். கடந்த 9ம் தேதி சகோதரர்கள் இருவரும் செலகோய் சந்தைக்கு சென்ற போது, போதை கும்பல் ஒன்று அவர்களை சீனர்கள் என நினைத்து சரமாரியாக திட்டியது.

தாங்கள் இந்தியர்கள் தான் எனக் கூறியும் கேட்காத கும்பல், இருவரையும் கத்தியால் குத்தியது. கடந்த 14 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அஞ்சல் சக்மா சிகிச்சை உயிரிழந்தார். மைக்கேல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக இரு சிறார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர்.

பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; டேராடூனில் அஞ்சல் சக்மா மற்றும் அவரது சகோதரர் மைக்கேலுக்கு நேர்ந்த சம்பவம் ஒரு கொடூரமான வெறுப்புக் குற்றமாகும். இது ஒரே இரவில் தோன்றுவதில்லை. பல ஆண்டுகளாக, இளைஞர்களுக்கு மோசமான தகவல்கள் மற்றும் பொறுப்பற்ற சித்தரிப்புகளை எடுத்துச் சொல்லி சொல்லி உருவாக்கியுள்ளனர். வெறுப்பை பரப்பும் ஆளும் பாஜவினால் இது சகஜமாக்கப்பட்டுள்ளது.

மரியாதை மற்றும் ஒற்றுமையால் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தினால் அல்ல. நம் நாடு அன்பும், பன்முகத்தன்மையும் கொண்டது. நமது சக இந்தியர்கள் தாக்கப்படும் போது, ​​அதை கண்டுகொள்ளாத பொறுப்பில்லாத சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது. நாம் நமது நாட்டை என்ன மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement