ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை வழக்கு; பழைய தீர்ப்பை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

6

புதுடில்லி: ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட பழைய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது.


ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. நான்கு புலிகள் காப்பகங்கள் மற்றும் 22 வனவிலங்கு சரணாலயங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த மலைத்தொடர், மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது.


ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் ச. கிலோ மீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும், சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து குறைந்த பட்சம் 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலை' என அங்கீகரிக்க முடியும். மேலும், 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலைத்தொடர்' என அழைக்க முடியும் என மத்திய அரசு அமைத்த குழு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு விளக்கத்தை சமர்ப்பித்தது. இந்த விளக்கத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.


இந்தத் தீர்ப்பு வட இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலப் பயன்பாடு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். இந்தப் புதிய வரையறை, வடமேற்கு இந்தியாவில் பாலைவனமாதலைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைப் பெருக்குவதிலும், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறினர்.


இந்த வழக்கு இன்று (டிசம்பர் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆரவல்லி மலைத்தொடர் மறுவரையறை தொடர்பான பழைய தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது. அதுமட்டுமில்லாமல், மத்திய அரசு பரிந்துரைகளையும், சுரங்கப் பணிகளையும் நிறுத்திவைக்கவும் உத்தரவிடப்பட்டது.


மேலும், ஆரவல்லி மலைத்தொடர் குறித்து ஆராய புதிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய தலைமை நீதிபதி, மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement