புத்தாண்டில் வருவாரா பும்ரா: நியூசிலாந்து தொடரில் எதிர்பார்ப்பு

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யாவுக்கு 'ரெஸ்ட்' கொடுக்கப்படலாம்.

இந்திய அணி புத்தாண்டை (2026), நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி, 5 'டி-20' தொடருடன் துவக்குகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க இருக்கிறது. முதல் போட்டி ஜன.11ல் வதோதராவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி ஜன.4 அல்லது 5ல் அறிவிக்கப்படலாம். வரும் 'டி-20' உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு 'வேகப்புயல்' பும்ரா, 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம்.


கேப்டன் சுப்மன்: கழுத்து பகுதி காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில் மீண்டும் கேப்டனாக களமிறங்க உள்ளார். 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா, கோலி அணிக்கு திரும்புவதால், விளையாடும் 'லெவனில்' ஜெய்ஸ்வால், ருதுராஜ் இடம் பெறுவது கடினம். மண்ணீரல் காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் வாய்ப்பை எதிர்பார்க்கிறார்.


கீப்பருக்கு போட்டி: விக்கெட்கீப்பர்-பேட்டர் பணியை ராகுல் தொடர்வார். இரண்டாவது கீப்பர் இடத்துக்கு இஷான் கிஷான், ரிஷாப் பன்ட், துருவ் ஜுரல் என மூவர் போட்டியிடுகின்றனர். உள்ளூர் தொடரில் ரன் மழை பொழியும் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவர். தென் ஆப்ரிக்க தொடரில் பிரசித் கிருஷ்ணா ரன்னை வாரி வழங்கினார். இவருக்கு பதில் சிராஜ் சேர்க்கப்படலாம்.

Advertisement