விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்காமல் ஏமாற்றும் திமுக: அண்ணாமலை சாடல்


கோவை:கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 6 ஏக்கர் நிலத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை மலுமிச்சம்பட்டியில் தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில், மாவட்ட மாநாடு நடந்தது.

இம்மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:

கோயம்புத்தூர் மாநகரத்துக்கு மெட்ரோ ரயிலுக்கான திட்டத்தை முழுமையான விவரங்கள் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. இதனால், முழுமையான விவரங்கள் அனுப்புங்கள் என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியபோது, மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. கோயம்புத்தூருக்கு மெட்ரோ திட்டம் கொண்டு வருவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொறுப்பு என்று உறுதி அளிக்கிறோம்.
கோயம்புத்தூரில் உலகத் தரம் வாய்ந்த சாலை அமைக்க, மத்திய அரசு, ரூ.3,500 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், அதற்கான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்காமல், திமுக மக்களை வஞ்சித்து வருகிறது, கோயம்புத்தூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 6 ஏக்கர் நிலத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக. இப்படி, தொடர்ந்து, கோயம்புத்தூர் மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது திமுக. தமிழகத்தை, குறிப்பாக கொங்கு பகுதியை குப்பைக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறது திமுக.
நூறு நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்கள் ஆக்குவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிறைவேற்றவில்லை. நமது பிரதமர், அதனை 125 நாட்களாக உயர்த்தி வழங்கியிருக்கிறார். இந்தியாவிலேயே 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அதிக நிதி பெற்ற மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, இதனை நிச்சயம் 150 நாட்களாக உயர்த்துவோம்.


ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும்போதும், கோயம்புத்தூர் பாதிக்கப்படுகிறது. திமுகவின் 1996 - 2001 ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கோயம்புத்தூர் குண்டு வெடிப்பினால், ஐம்பதுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்தோம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கை, கால்கள், கண்களை இழந்தனர். இந்த குண்டுவெடிப்பு நடக்காமல் இருந்திருந்தால், இந்தியாவின் முதல் பத்து நகரங்களில் ஒன்றாக, கோயம்புத்தூர் இருந்திருக்கும். திமுகவின் 2006 - 2011 ஆட்சிக்காலத்தில், கடுமையான மின்தடையால், கோயம்புத்தூர் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டன. ஐந்து ஆண்டுகள் கோயம்புத்தூர் இருட்டில் இருந்தது. திமுக 2021 ஆட்சிக்கு வந்தபோது, கோவிட் தொற்று நோய் காலம். வேண்டுமென்றே, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை, தமிழகத்திலேயே குறைவான எண்ணிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு வழங்கி, திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மக்களைப் பழி வாங்கியது. கோயம்புத்தூரை நாசமாக்கிய இத்தகைய திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் எப்போதும் கோயம்புத்தூர் மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது.

வரும் 2026 தேர்தலுக்கு, இன்னும் 100 நாட்கள் இருக்கின்றன. தமிழக பாஜ சகோதரர்களும், அஇஅதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி சகோதரர்களும் கடுமையாக உழைத்து, கோயம்புத்தூரில் உள்ள பத்து தொகுதிகளையும் மக்களுக்கான நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement