வாக்காளர் சிறப்பு முகாம்களில்... குளறுபடி படிவமின்றி தவித்த ஊழியர்கள்
கோவை, கோவையில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில், போதுமான படிவங்களோ, தகவலோ இல்லாமல் ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
கோவை மாவட்டத்திலுள்ள, 3,563 ஓட்டுச்சாவடிகளில் கடந்த இரு தினங்களாக, வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் வாக்காளர் பெயர் சேர்க்க படிவம் 6 ஐ பூர்த்தி செய்ய 35,065 பேர், பெயர் நீக்க 813 பேர், முகவரி மற்றும் பெயர்களில் மாற்றம் செய்ய படிவம் 8 ஐ பூர்த்தி செய்து, 14,935 பேர் என்று மொத்தம், 50,813 பேர் படிவங்களை சமர்ப்பித்திருந்தனர். மாவட்டத்திலுள்ள, 3,563 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் படிவங்களை வழங்கும் பணிகளையும், பூர்த்தி செய்த படிவங்களை பெற்றுக்கொள்ளும் பணிகளையும் செய்தனர்.
குழம்பும் ஊழியர்கள் அவர்களுக்கு உதவ தன்னார்வலர்களோ, அரசியல் கட்சியினரோ உடன் இல்லை. அதனால் ஒரே நேரத்தில் பல வாக்காளர்கள் படிவங்களை, கேட்டு பெறுவதாலும், சந்தேகங்களை கேட்பதாலும், ஊழியர்கள் குழப்பமடைகின்றனர்.
ஒரு கட்டத்தில் ஊழியர்கள் சிலர், 'படிவம் 8 பூர்த்தி செய்யவே வேண்டாம்; அனைவரும் படிவம் 6 பயன்படுத்துங்கள்' என்று கூறி அதை மட்டுமே கொடுக்கின்றனர். பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 மற்றும் முகவரி மாற்றம், பெயர் திருத்தத்திற்கு படிவம் 8 கொடுப்பதில்லை.
எல்லாவற்றுக்கும் படிவம் 6 வாக்காளர் சொல்வதை காதில் போட்டுக்கொள்ளாமல், படிவம் 6 ஐ கொடுத்து, அதனுடன் உறுதிமொழிப்படிவத்தை கொடுத்து, இணைக்க வேண்டிய ஆவணங்களை கூறி அனுப்புகின்றனர்.
சிலர், உடனுக்குடன் படிவங்களை பூர்த்தி செய்து, போட்டோ ஒட்டித்தர கேட்கின்றனர். நேற்று முன்தினம் வாக்காளர் ஒருவருக்கு வழங்க, படிவம் 6மற்றும் உறுதிமொழிப்பத்திரம் தீர்ந்துவிட்டதால், இரண்டையும் பத்து ஜெராக்ஸ் நகல் எடுத்துவர அறிவுறுத்தினர்.
வாக்காளர்களில் பலரும் இது போன்று ஜெராக்ஸ் எடுத்துவர, அதை இருப்பு வைத்துக்கொண்டு பிறருக்கு வழங்கினர். இதனால் வாக்காளர்களுக்கு குழப்பமும், அலைச்சலும் ஏற்பட்டது.
படிவம் கொடுத்திருந்தோம் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
நீங்கள் சொல்வது போன்று சில பூத்களில் நடந்தது; அவர்களை எச்சரித்திருக்கிறோம். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி படிவம் 6, புது வாக்காளர்களாக இணைபவர்களுக்கும், படிவம் 7 பெயர் நீக்கத்துக்கும், படிவம் 8 பெயர் திருத்தம், முகவரி மாற்றத்துக்கும் வழங்க அறிவுறுத்தியிருக்கிறோம்.
படிவம் 6, 2.53 லட்சமும்; படிவம் 8, 2 லட்சமும் அனைத்து பூத்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் படிவம் இல்லை என கூறுவது பற்றி, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த தாலுகா தாசில்தார்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் சனி, ஞாயிறுகளில் நடைபெறும் முகாமில், எவ்வித குழப்பமும் ஏற்படாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நேற்று முன் தினம் வாக்காளர் ஒருவருக்கு வழங்க, படிவம் 6மற்றும் உறுதிமொழிப்பத்திரம் தீர்ந்துவிட்டதால், இரண்டையும் பத்து ஜெராக்ஸ் நகல் எடுத்துவர அறிவுறுத்தினர். வாக்காளர்களில் பலரும் இது போன்று ஜெராக்ஸ் எடுத்துவர, அதை இருப்பு வைத்துக்கொண்டு பிறருக்கு வழங்கினர். இதனால் வாக்காளர்களுக்கு குழப்பமும், அலைச்சலும் ஏற்பட்டது.
மேலும்
-
புதிய கல்விக்கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்; தர்மேந்திர பிரதான் பேட்டி
-
மயானத்துக்கு உரிமை கோரும் வக்ப் கலெக்டருக்கு 'ஐகோர்ட் நோட்டீஸ்'
-
வீடு தேடி வரும் நர்சிங் சேவைகள்
-
கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்
-
திமுக மாநாட்டுக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள்; பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணியர்!
-
தெரு மாடுகளுக்கு ரூ.48 லட்சத்தில் காப்பகம்; மாநகராட்சி ஏற்பாடு