சமூகநீதிக்கு மரியாதை செய்ய திமுகவுக்கு மனம் இல்லை; அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: சமூகநீதிக்கு மரியாதை செய்ய திமுகவுக்கு மனம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

அரசு நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்கான சர்வே மிகவும் அவசியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், இத்தகைய சர்வே நடத்தும் திமுக அரசு, சமூகநீதி நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து ஜாதிவாரி சர்வே நடத்த மறுப்பது கண்டிக்கத்தக்கது.

நலத்திட்ட தாக்க அறிவிக்கைக்கான சர்வே தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி வீடுகளில் நடத்தப்பட வேண்டும். ஜாதிவாரி சர்வே என்பது அதைவிட சற்றுக் கூடுதலாக 2.26 கோடி வீடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இன்னும் கேட்டால் ஜாதிவாரி சர்வே நடத்தும் போது, அதில் எழுப்பப்படும் 70-க்கும் மேற்பட்ட வினாக்களின் வாயிலாகவே நலத்திட்டங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்து விட முடியும் என்பதால், இதற்காக தனி சர்வே நடத்த வேண்டிய தேவை இருக்காது. ஜாதிவாரி சர்வே நடத்த ரூ. 300 கோடி செலவாகும். இது அரசின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.

நலத்திட்ட தாக்க மதிப்பீட்டு சர்வேயை நடத்த தமிழக அரசுக்கு இருக்கும் அதிகாரம், ஜாதிவாரி சர்வேயை நடத்துவதற்கு இல்லையா? அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. ஆனால், சமூகநீதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற மனம் தான் திமுகவுக்கு இல்லை.

சமூகநீதியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. தற்போதுள்ள சமூக அநீதி ஆட்சி வீழ்த்தப்பட்டு, சமூகநீதி ஆட்சி அமைக்கப்படும் போது க்ண்டிப்பாக ஜாதிவாரி சர்வே நடத்தப்படுவதும், அதனடிப்படையில் சமூகநீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் உறுதி.

இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement