இளைஞர்கள் நல்வழிப்படுத்த திட்டங்கள் இல்லை: திமுகவுக்கு விஜய் கண்டனம்

13


சென்னை: '' தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை,'' என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.



கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், 'ரீல்ஸ்' மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையிலிருந்து சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.


சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

Advertisement