தமிழகத்தையே குற்றங்களின் கூடாரமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டு கால சாதனையா: நயினார் கேள்வி

2

சென்னை: தமிழகத்தையே குற்றங்களின் கூடாரமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டு கால சாதனையா என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி இரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இருந்த 17 வயது சிறுவர்கள் சிலர் வடமாநிலத் தொழிலாளி ஒருவரின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குரூரம் நம் மனக்கண்ணைவிட்டு அகலும் முன்பே, அதே இரயில் நிலையத்தில் தற்போது போதையில் இருந்த இரு இளைஞர்கள் வியாபாரி ஒருவரை இழுத்துச் சென்று முகத்தில் குத்தித் தாக்கும் காணொளி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் போதைப்பொருட்கள் பெருக்கெடுத்துப் பரவுவதற்கும், குற்றவாளிகள் கொழுப்பெடுத்துத் திரிவதற்குமான சான்று இது. “திமுக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டமே இல்லை” எனப் பொதுமக்களிடம் நாகூசாமல் பொய்யுரைத்த திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியன் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தின் பெண் பிள்ளைகளைப் பாலியல் கரங்களிலிருந்தும், ஆண் பிள்ளைகளை போதையின் பிடியிலிருந்தும் காப்பதே தமிழகப் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதே, இது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா?

எம்பெருமான் முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணி உட்பட ஒட்டுமொத்த தமிழகத்தையே குற்றங்களின் கூடாரமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டு கால சாதனையா?

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

Advertisement