இதே நாளில் அன்று
ஜனவரி 1: குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம், சரஸ் கிராமத்தில், ஆசிரியர் அரிபாய் தேசாய் - ஜம்னாபென் தம்பதியின் மகனாக, 1892ல், இதே நாளில் பிறந்தவர், மகாதேவ தேசாய்.
சூரத்தில் பள்ளி படிப்பை முடித்தவர், மும்பையின், எல்பின்ஸ்டோன் கல்லுாரியில் சட்ட படிப்பை முடித்து, மும்பை மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராக பணியாற்றினார். 1917ல், மகாத்மா காந்தியை சந்தித்தார். அப்போதே பணியில் இருந்து விலகி, காந்தியின் தனி செயலராகி, உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.
ஆங்கிலம், குஜராத்தி, சமஸ்கிருதம், வங்கம், ஹிந்தி, மராத்தி மொழிகளை அறிந்த இவர், பல நுால்களை எழுதினார். காந்தியின் ஆசிரமத்தில் சமைப்பது, துவைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்தார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இவர், தன் 50வது வயதில், 1942, ஆகஸ்ட் 15ல், சிறையிலேயே மாரடைப்பால் காலமானார். இவர் குறித்து வைத்திருந்த காந்தியின் அன்றாட நிகழ்ச்சி விபரங்கள் தொகுக்கப்பட்டு, 'மகாதேவ் பாய் கீ டைரி' என்ற நுாலாக வெளியானது.
'காந்தியின் நிழல்' மகாதேவ தேசாய் பிறந்த தினம் இன்று!