இது உங்கள் இடம்
ஒற்றை வண்டியின் இரு சக்கரங்கள்!
கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும், ஆர்.எஸ்.எஸ்., பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது' என்று கூறியுள்ளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
தி.மு.க., குறித்து எவர் விமர்சனம் செய்தாலும், உடனே அவர்களை பா.ஜ.,வின் கைக்கூலிகள் என்றும், ஆர்.எஸ்.எஸ்., அடிமை என்றும் சொல்வது திருமாவளவனின் வழக்கம். காரணம், அவர் தி.மு.க.,வின் ஆகச்சிறந்த அடிமையாக இருப்பதால், மற்ற வர்களையும் அதே கண்ணோட்டத்துடன் விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேநேரம், சீமானும், திருமாவளவனும் ஒரே வண்டியில் பூட்டப்பட்ட இரு சக்கரங்கள் என்பதை, அவர்களது அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தாலே தெரிந்து கொள்ளலாம்!
'தமிழர்களின் அடையாளத்தை மீட்டெடுக்க பிறந்த ஒரே தலைவன்' என்று தன்னைக் கூறிக் கொள்ளும் சீமான், திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற ஹிந்துக்கள் முயன்றபோது, 'தீபம் ஏற்றினால் வறுமை போய் விடுமா?' என்று கேட்டார்.
மலையில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணியினர் ஆண்டுக்கணக்கில் போராடும் வரலாறு தெரியாமல், 'போன ஆண்டு ஏன் தீபம் ஏற்றவில்லை; அதற்கு முந்தைய ஆண்டு ஏன் ஏற்றவில்லை; தேர்தலை முன்னிட்டு இப்போது பிரச்னை செய்கின்றனர்' என்றார்.
தமிழரின் அடையாளமே வழிபாட்டு தலமான கோவில்களும், மொழி வளத்தை பறைசாட்டும் இலக்கண, இலக்கியமும் தான்... அவற்றையெல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு அழிப்பதை வேடிக்கை பார்க்கும் இவர், தமிழரின் எந்த அடையாளத்தை மீட்கப் போகிறார்?
இதேபோன்று தான் பட்டியலினப் போராளி என, தன்னைக் கூறிக் கொள்ளும்திருமாவளவன்!
பட்டியலினத்தை காக்க அவதாரம் எடுத்து வந்தது போல் மேடைகளில் வீரமுழக்கம் இடுவார்.
ஆனால், வேங்கை வயலில், தன் இனத்தவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த போதும், மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டபோதும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த போதும், திருநெல்வேலியில் கவின் என்பவர் ஆணவக்கொலை செய்யப் பட்டபோதும் மவுன விரதம் இருந்தார்.
எனவே, சீமானுக்கு அரசியல் செய்ய ஒரு கொள்கை வேண்டும், அதற்காக தமிழ் தேசியமும்; திருமாவளவனுக்கு அரசியல் வியாபாரம் நடக்க ஓட்டு வங்கி வேண்டும், அதற்கு பட்டியலினமும் தேவை!
ஆக, அரசியல் வியாபாரம் போணி ஆக, இங்கே ஒரே நாடகம் வெவ்வேறு பெயர்களில் அரங்கேறுகிறது!
போலி மதச்சார்பின்மை பேசுவோரை ஓரம் கட்டுங்கள்! எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற தி.மு.க., முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும், சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதாகவும், அதிலிருந்து அவர்களை தங்களால் மட்டுமே காக்க முடியும் என்பது போன்றும் பேசியுள்ளனர்.
இந்தியாவில் மொத்தம், 28 மாநிலங்களும், எட்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இதில், யூனியன் பிரதேசமான டில்லி உட்பட, 13 மாநிலங்களில் பா.ஜ., நேரடியாகவும், ஆறு மாநிலங்களில் கூட்டணி ஆட்சியும் அமைத்துள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசத்தைப் போன்று இம்மாநிலங்களில் சிறுபான்மையினர் அடித்து விரட்டப்படுகின்றனரா; சர்ச், மசூதிகள் இடிக்கப்பட்டனவா, சிறுபான்மையினர் பயந்து, நடுங்கி, அஞ்சி வாழ்கின்றனரா; எத்தனை மதக்கலவரங்கள் நடந்துள்ளன?
இத்தனைக்கும் இந்தியாவிலேயே ஜம்மு - காஷ்மீர், லட்சத்தீவுக்கு அடுத்து, அதிக முஸ்லிம்கள் வாழும் மாநிலங்களான உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, அசாமில் பா.ஜ., தான் தனிப்பெரும்பான்மை யுடன் ஆட்சி செய்கிறது.
அதேபோன்று, நாட்டி லேயே கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் ஐந்து மாநிலங்களில், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா என நான்கு மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி தான் ஆட்சியில் உள்ளது.
அங்கெல்லாம் சிறுபான்மை மக்களுக்கு ஆபத்து ஏற்படாத நிலையில், தி.மு.க., ஆளும் தமிழகத்தில் மட்டும் ஆபத்து என்றால், யாரால் ஏற்படும்?
இப்படித்தான் திருப்பரங்குன்றம் விஷயத்தில், ஹிந்துக்கள் மலை மீது தீபம் ஏற்றினால் மதக்கலவரம் ஏற்படும் என்று தடுத்த தி.மு.க., அரசு, அதே மலை மீது முஸ்லிம்கள் சந்தனக்கூடு திருவிழா நடத்த முழு ஒத்துழைப்பு வழங்கியது.
இதிலிருந்து தெரிகிறதுஅல்லவா... எவர் மதக் கலவரத்தை துாண்டுகின்றனர் என்று!
சிறுபான்மையினர் ஓட்டுக்காக, இல்லாத ஒன்றை இருப்பதாக பயம் காட்டி, தங்களை ஆபத்பாந்தவர்கள் போல் சித்தரிக்க முயற்சிக்கின்றனர், தி.மு.க., முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும்!
இவர்களை பொறுத்தவரை, கிறிஸ்துவர்கள்,இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பங்கேற்பதற்கு பெயர் தான் மதச்சார்பின்மை; ஹிந்து பண்டிகைகளில் பங்கேற்பதும், வாழ்த்து சொல்வதும் மதவாதம்.
இதில், தி.மு.க., மதசார்பற்ற கட்சியாம்; பா.ஜ., மதவாத சக்தியாம்!
வடமாநிலங்களை போன்று, இங்கும் போலி மதச்சார்பின்மையாளர்களை தேர்தலில் மக்கள் விரட்டி அடித்தால் தான், நாட்டில் உண்மையான மதசார்பின்மை ஏற்படும்!
மரபுவழி சங்கீதம் மீட்டெடுக்கப்படுமா? வை.பார்த்தசாரதி, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில், கர்நாடக சங்கீத இசைத் திருவிழா களைகட்டியுள்ளது. நுாற்றுக்கணக்கான சபாக்கள் இருந்தாலும், ஒரு சில பாரம்பரிய சபாக்களே இக்கலையை வளர்ப்பதில் சிரத்தையுடன் செயல்படுகின்றன. பொதுவாக, கர்நாடக சங்கீதம் என்று சொல்வதை விட, சாஸ்திரீய சங்கீதம் என்று குறிப்பிடுவதே சரியானது.
ஏனெனில், முறைப்படி ஒரு குருவிடமிருந்து இசையைப் பயின்று, அந்த பாரம்பரியத்தை விடாது நீண்ட காலம் தழைத்திருக்க செய்வது, சீடர்கள் தான்.
இன்றைய காலத்தில் பல சங்கீத ஜாம்பவான்களின் பாரம்பரியம், ஏறக்குறைய முற்றுப்பெற்றுவிட்டது என்றே கூறலாம். இதன் காரணமாக, பகட்டும், வர்த்தக செயல்பாடுகளும் சாஸ்திரீய சங்கீதத்தை வேறு திசையில் கொண்டு சென்று விட்டன.
பாரம்பரியம் மறைந்தால், அதற்கான தனித்துவமான அடையாளமும் அழிந்துவிடும் என்பதை நினைவில் கொண்டு, ஜனரஞ்சகமான பிரபல இசை கலைஞர்களின் கச்சேரிகள் மட்டுமின்றி, மூத்த இசை கலைஞர்களின் இசைப்புலமையும், அதை அடியொற்றி வளர துடிக்கும் இளம் கலைஞர்களையும் பங்கேற்க செய்வதன் வாயிலாக, முறைசார்ந்த மரபுவழி சங்கீதம் ஆல் போல் தழைக்க உதவும்.
எனவே, சபா நிர்வாகிகள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்!
மரபுவழி சங்கீதம் மீட்டெடுக்கப்படுமா? என்று திரு வை.பார்த்தசாரதி, சென்னையிலிருந்து அனுப்பிய, இ - மெயில் கடிதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மை.
இப்போதெல்லாம் தியாகராஜர் கீர்த்தனைகளை மட்டுமல்ல எல்லாவித கீர்த்தனைகளை மேற்கத்திய இசையில் பாடுவது ஒரு சில பாடகர்களுக்கு வழக்கமாகி விட்டது.
ஒரு கர்நாடக சங்கீத பாடகர் இன்னும் ஒரு படி மேலே சென்று, கர்நாடக இசைப்பாணியில் இயேசு கிறிஸ்துவதப் பாடல்கல் பாடி, அது பாரம்பர இசைப் பாடகர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது என்பது அறிந்ததே.
அவர்கள் அந்த கீர்த்தனைகளை தெய்வீக மணம் கமல பக்தி அர்ப்பணிப்புடன் பாடுவதில்லை. இந்த மாற்றம் எல்லாம் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே.