யூரோவை கரன்சியாக ஏற்றது பல்கேரியா

சோபியா: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியா, யூரோவை சட்டப்பூர்வ கரன்சியாக ஏற்றுள்ளது. இதன் வாயிலாக, யூரோ கரன்சியை பயன்படுத்தும், 21வது நாடாக பல் கேரியா மாறியுள்ளது.

துவக்கத்தில் ரஷ்யாவுடன் பல்கேரியா இணக்கம் காட்டி வந்தது. பொருளாதார மந்த நிலை மற்றும் நிதி ஆதாரத்தின் நிலையற்ற தன்மை காரணமாக, அந்நாட்டுடன் இருந்த அரசியல் ரீதியிலான தொடர்பு முறிந்தது.

இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பாக பல்கேரியா மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு ஆதரவாக, 46.5 சதவீதத்தினரும், எதிராக 46.8 சதவீதத்தினரும் ஓட்டளித்தனர்.

இது தேசிய அடையாளத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி என்றும் சிலர் விமர்சித்தனர். இதை பொருட்படுத்தாத பல்கேரியா அரசு, 2007ல் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தது.

இதையடுத்து, பயன்பாட்டில் உள்ள பல்கேரிய கரன்சியான லெவ்க்கு பதிலாக, யூரோவை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உடனடி கரன்சி மாற்றம் சிரமத்தை ஏற்படுத்தும் என கருதிய பல்கேரிய அரசு, இந்த மாதம் முழுதும் லெவ் கரன்சி செல்லும் என்றும், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் யூரோ மட்டுமே அதிகாரப்பூர்வ கரன்சியாக மாறும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில், பல்கேரியாவில் அரசியல் நிலையற்ற தன்மை நீடிப்பதுடன், அந்நாட்டு அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பிரதமராக இருந்த ரோஷன் ஷெல்யாஸ்கோவ் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

மொத்தம், 27 உறுப்பு நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியனில், செக் குடியரசு, ஹங்கேரி, டென்மார்க், போலந்து, ருமேனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய ஆறு நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த கரன்சிகளை பயன்படுத்துகின்றன. மற்ற, 21 நாடுகளும் யூரோவை பயன்படுத்துகின்றன.

Advertisement