ஆஸ்திரேலிய ஓபனில் வீனஸ் வில்லியம்ஸ்: 'வைல்டு கார்டு' அனுமதி
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஐந்து ஆண்டுக்குப் பின் களமிறங்குகிறார் வீனஸ் வில்லியம்ஸ்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், வரும் ஜன. 18ல் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் துவங்குகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சிற்கு 45, 'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்தொடரில் களமிறங்கும் மூத்த வீராங்கனை என்ற சாதனை படைக்க உள்ளார். இதற்கு முன், 2015ல் ஜப்பானின் கிமிகோ டேட், தனது 44வது வயதில் இத்தொடரில் பங்கேற்றார். தவிர இவர், இத்தொடரின் ஒற்றையர் பிரிவில் 22வது முறையாக களமிறங்க உள்ளார்.
கடந்த 1998ல் ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக விளையாடிய வீனஸ், ஒற்றையரில் 2 முறை (2003, 2017) பைனல் வரை சென்றார். பெண்கள் இரட்டையரில் 4 முறை (2001, 2003, 2009, 2010) சாம்பியன் பட்டம் வென்ற இவர், கலப்பு இரட்டையரில் ஒரு முறை (1998) கோப்பை கைப்பற்றினார். கடைசியாக இங்கு, 2021ல் விளையாடினார். இத்தொடரின் ஒற்றையரில் 54 வெற்றி, 21 தோல்வியை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து வீனஸ் கூறுகையில், ''ஐந்து ஆண்டுகளுக்கு பின், ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்க இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு மறக்க முடியாத நினைவுகள் நிறைய உள்ளன,'' என்றார்.