'டவுட்' தனபாலு

2

தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு:



தமிழகத்தில் நாம் ஒற்றுமையாக பயணித்து கொண்டிருக்கிறோம்; இங்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பிரிவினைவாத அரசியல் எடுபடாது. பா.ஜ.,வில் நயினார் நாகேந்திரன் இன்னும், 'டேக் ஆப்' ஆகாமல் உள்ளார்.

டவுட் தனபாலு:



அது சரி... நீங்களும், நயினார் நாகேந்திரனும், ஒருகாலத்தில் அ.தி.மு.க.,வில் ஒன்றாக பயணித்தவர்கள் தானே... இருவருமே கட்சி மாறியிருக்கீங்க... இதுல, நயினார் பா.ஜ., மாநில தலைவராகிட்டார்... அதே மாதிரி, தி.மு.க., தலைமை பதவிக்கு உங்களால வர முடியுமா என்ற, 'டவுட்' வருதே!

---

ராமதாஸ் அணியின், பா.ம.க., செயற்குழு உறுப்பினர் சுகந்தன்:



ராமதாஸ், எனக்கு தாத்தா மட்டுமல்ல; ஹீரோ. அவர் எந்த பதவியிலும் அமரவில்லை. தன் மகன் அன்புமணியை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார். 2004ல் அன்புமணி, பா.ம.க.,வில் சேர்ந்தபோது, இளைஞர் அணி தலைவர், ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் என, எவ்வளவு பதவிகள் கொடுக்கப்பட்டன! அன்புமணி அமைச்சர் ஆகலாம்; என் தம்பி முகுந்தன், கட்சி பதவிக்கு வரக்கூடாதா? அவருக்கு வந்தால் ரத்தம், எங்களுக் கென்றால் தக்காளி சட்னியா?

டவுட் தனபாலு:



அடடா... 10 முதல், 12 மாவட்டங்களில் மட்டும் செல்வாக்குள்ள கட்சியில் ராமதாஸ், அன்புமணி, சவுமியா, ஸ்ரீகாந்தி, முகுந்தன், நீங்கன்னு எத்தனை வாரிசுகள் தான் களம் இறங்குவீங்க... கட்சியில், எல்லா பதவிகளையும் குடும்பத்தினரே பங்கு போட்டுக்கிட்டா, கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும்தான் தொண்டர்களா என்ற, 'டவுட்' வருதே!

---

பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்:



தமிழக முதல்வர் ஸ்டாலினுடன், கடவுள் முருகன் இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். அப்படியென்றால், 'திருப்பரங்குன்றத்திற்கு பெரிய அநீதி இழைத்து விட்டேன். அதற்காக முருகனிடம் மன்னிப்பு கேட்டு மொட்டை அடித்து கொள்கிறேன்' என, ஸ்டாலின் கூறுவாரா? மொட்டை கூட அடிக்க வேண்டாம்... திருப்பரங்குன்றத்திற்கு வந்து, முதல்வர் ஸ்டாலினை சாமி கும்பிட சொல்லுங்கள் பார்க்கலாம்.

டவுட் தனபாலு:



போகாத ஊருக்கு வழி சொல்ற கதையா இருக்கே... கடவுள் முருகன், ஸ்டாலினுடன் இருக்காரோ, இல்லையோ... கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் இருக்கார் என்பதில், 'டவுட்' இல்லை... திருப்பரங்குன்றத்திற்கு அநீதி இழைத்தவர்களுக்கு அந்த ஹிந்துக்கள், தேர்தலில் பாடம் புகட்டுவர் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!

Advertisement