உஸ்மான் கவாஜா ஓய்வு: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து


சிட்னி: ஆஸ்திரேலியாவின் கவாஜா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும், ஆஷஸ் தொடரின் ஐந்தாவது, கடைசி டெஸ்ட் ஜன. 4ல் சிட்னி மைதானத்தில் துவங்குகிறது. இப்போட்டியுடன் ஆஸ்திரேலிய 'டாப்-ஆர்டர் பேட்டர்' உஸ்மான் கவாஜா 39, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார்.


கடந்த 2011ல் சிட்னி டெஸ்டில் (எதிர்: இங்கிலாந்து) அறிமுகமான கவாஜா, தனது கடைசி சர்வதேச போட்டியை சிட்னியில் விளையாடுகிறார். இதுவரை 87 டெஸ்ட் (6206 ரன், 16 சதம், சராசரி 43.39, 'ஸ்டிரைக்ரேட்' 48.86), 40 ஒருநாள் (1554 ரன், 2 சதம், சராசரி 42.00, 'ஸ்டிரைக்ரேட்' 84.09), 9 சர்வதேச 'டி-20' (241 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-23) பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த கவாஜா, ஐ.சி.சி., சார்பில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது (2023) வென்றுள்ளார்.

சமீபகாலமாக 'பார்மின்றி' தவிக்கும் கவாஜா, தற்போதைய ஆஷஸ் தொடரில் விளையாடிய 3 டெஸ்டில் (5 இன்னிங்ஸ்) 153 ரன் மட்டும் எடுத்துள்ளார். இதனால் இவர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் வலியுறுத்தினர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் கவாஜா.

இதுகுறித்து கவாஜா கூறுகையில், ''ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியதை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். சிட்னி டெஸ்ட் எனக்கு கடைசி போட்டி. இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்,'' என்றார்.

Advertisement