உலக விளையாட்டு செய்திகள்
மான்செஸ்டர் சிட்டி 'டிரா'
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, சதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதுவரை விளையாடிய 19 போட்டியில், 13 வெற்றி, 2 'டிரா', 4 தோல்வி என 41 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆர்சனல் அணி (45 புள்ளி) நீடிக்கிறது.
அர்ஜென்டினா அசத்தல்
பெர்த்: ஆஸ்திரேலியாவில், கலப்பு அணிகளுக்கான யுனைடெட் கோப்பை டென்னிஸ் 4வது சீசன் நடக்கிறது. மொத்தம் 18 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் அசத்திய அர்ஜென்டினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மெல்போர்ன் அணி ஏமாற்றம்
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில், 'பிக் பாஷ் லீக்' கிரிக்கெட் ('டி-20') தொடர் நடக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த லீக் போட்டியில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி (195/6) 4 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியிடம் (199/6) தோல்வியடைந்தது. பிரிஸ்பேன் அணி 3வது வெற்றியை பதிவு செய்தது. இது, மெல்போர்ன் அணிக்கு முதல் தோல்வி.
முதல் 'சூப்பர் ஓவர்'
ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில், 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் ('டி-20') 4வது சீசன் நடக்கிறது. இதில் ஜோகனஸ்பர்க் (205/4), டர்பன் (205/8) அணிகள் மோதிய விறுவிறுப்பான லீக் போட்டி 'டை' ஆனது. இது, 'எஸ்.ஏ.20' வரலாற்றில் 'டை'யில் முடிந்த முதல் போட்டியானது. பின், 'சூப்பர் ஓவர்' அசத்திய ஜோகனஸ்பர்க் அணி (8/0), டர்பனை (5/1) வீழ்த்தியது.
எக்ஸ்டிராஸ்
* ராஞ்சியில் நடந்த பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ராஞ்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சூர்மா கிளப் அணியை வீழ்த்தியது. ராஞ்சி அணி 6 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் டில்லி அணி (7 புள்ளி) உள்ளது.
* புரோ மல்யுத்த லீக் 5வது சீசனுக்கான (ஜன. 16 - பிப். 1) மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக, முன்னாள் தேசிய பயிற்சியாளர் சந்திரா விஜய் சிங் நியமிக்கப்பட்டார்.
* ஆமதாபாத்தில் இன்று நடக்கவுள்ள விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடருக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. தமிழக அணி, இதுவரை விளையாடிய 4 போட்டியில், ஒரு வெற்றி, 3 தோல்வி என, 4 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.
* இந்தியா வரவுள்ள நமீபியா சீனியர் பெண்கள் கிரிக்கெட் அணி, 2 ஒருநாள், 2 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் அசாம் சீனியர் பெண்கள் அணியுடன் விளையாட உள்ளது. முதல் போட்டி ஜன. 8ல் நடக்கவுள்ளது.
* இந்திய அணி, வங்கதேச மண்ணில் 3 ஒருநாள் (செப். 1, 3, 6), 3 'டி-20' (செப். 9, 12, 13) போட்டிகளில் விளையாடும் என, வங்கதேச கிரிக்கெட் போர்டு அறிவித்தது. ஆனால் அங்கு நிலையான அரசு இல்லாத காரணத்தினால், இத்தொடருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு அனுமதி அளிப்பது சந்தேகமாக உள்ளது.