தங்கம் வென்றார் திலோத்தமா: தேசிய துப்பாக்கி சுடுதலில்
போபால்: தேசிய துப்பாக்கி சுடுதலில் திலோத்தமா இரண்டாவது தங்கம் வென்றார்.
போபாலில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 68வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில், ஹரியானாவின் அமீரா அர்ஷத், 251.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். ரயில்வே வீராங்கனை ராஜ்ஸ்ரீ அனில்குமார் சஞ்சேதி (251.8 புள்ளி), 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளி வென்றார். சட்டீஸ்கரின் பிரஞ்சு ஸ்ரீ சோமனி (230.5) வெண்கலம் கைப்பற்றினார்.
இதன் அணிகள் பிரிவில் ஹரியானா அணி (1892.7 புள்ளி) தங்கம் வென்றது. ரயில்வே (1886.0), மத்திய பிரதேச (1884.3) அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றின.
ஜூனியர் பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் கர்நாடகாவின் திலோத்தமா சென் (253.1 புள்ளி) தங்கம் வென்றார். தவிர இவர், 'யூத்' பிரிவிலும் (251.6) தங்கத்தை தட்டிச் சென்றார். ஜூனியர் பிரிவில் மகாராஷ்டிராவின் சமிக் ஷா (250.0), ஹரியானாவின் ரமிதா (230.0) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். 'யூத்' பிரிவில் அமீரா (251.4), மகாராஷ்டிராவின் அவந்திகா (229.4) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
அணிகளுக்கான ஜூனியர் பிரிவில் ஹரியானா, கர்நாடகா, குஜராத், முதல் மூன்று இடங்களை கைப்பற்றின. 'யூத்' பிரிவில் கர்நாடகா அணிக்கு தங்கம் கிடைத்தது. வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை ஹரியானா, மத்திய பிரதேசம் வென்றன.
ஆண்களுக்கான 'டிராப்' பிரிவு பைனலில் உ.பி.,யின் ஜுஹைர் கான் (43 புள்ளி) தங்கம் வென்றார். உத்தரகாண்ட்டின் ஷபாத் பரத்வாஜ் (40), ஐதராபாத்தின் கைனன் செனாய் (33) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதன் அணிகள் பிரிவில் உ.பி., தங்கம் வென்றது. பஞ்சாப், உத்தரகாண்ட் வெள்ளி, வெண்கலம் கைப்பற்றின.