இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து ஏற்றுமதி செய்ய 'லெனோவா' திட்டம்

புதுடில்லி: லெனோவா நிறுவனம், இந்தியாவில் ஏ.ஐ., சர்வர்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்காட் டீஸ் கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள எமது மேம்பாட்டு ஆய்வகத்தில் செயற்கை நுண்ணறிவு சர்வர்கள் வடிவமைக்கப்பட்டு, புதுச்சேரி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

அவை, உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படும். ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வேகத்திறனுக்கு அடிப்படை தேவையான 1 மற்றும் 2 சாக்கெட் அமைப்புகளை இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்க உள்ளோம்.

துவக்கத்தில் இந்திய சந்தையில் கவனம் செலுத்தப்படும். அதேவேளையில், மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் தயாரிப்பில் நாம் அடைந்துள்ள வெற்றியை பார்க்கும்போது ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பு இருப்பது தெளிவாகிறது.

முழுதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் 'ஏ.ஐ., மாடல்' தொழில்நுட்பத்துக்கு இந்திய அரசு நன்கு ஊக்கம் அளிக்கிறது.

ஏ.ஐ. டேட்டா சென்டர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சவால்களை தவிர்க்க, சர்வர்களை குளிர்விக்க பயன்படுத்தப்படும் பழைய முறைகளை கை விட வேண்டும்.

லெனோவாவில் 'நெப்டியூன்' எனும் திரவ குளிர்விப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது, மின்சார செலவை 40 சதவீதம் வரை குறைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.டி., துறையில் ரூ.17,000 கோடி உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் தேர்வாகியுள்ள சில நிறுவனங்களுள் லெனோவோவும் ஒன்று

Advertisement