மதுரையில் ஜன.22 முதல் 25 வரை இளைஞர் விளையாட்டு திருவிழா

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 16 - 35 வயதுக்குட்பட்டோருக்கான முதல்வரின் இளைஞர் விளையாட்டு திருவிழா ஜன. 22 முதல் 25 வரை நடக்கிறது.

1991, ஜன. 1 மற்றும் 2009 டிச. 12 தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் cmyouthfestival.sdat.in மற்றும் www.sdat.tn.gov.in இணையதளம் மூலம் ஜன. 21 க்குள் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட அளவில் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் போட்டி நடக்கும். தடகளத்தில் 100 மீட்டம் ஓட்டம், குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம் (இரட்டையர்), கயிறு இழுக்கும் போட்டி, ஆண்களுக்கான 'ஸ்ட்ரீட்' கிரிக்கெட், பெண்களுக்கான எறிபந்து போட்டிகள் நடத்தப்படும். முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000 பரிசு, 2ம் இடத்திற்கு ரூ.2000, மூன்றாம் இடத்திற்கு ரூ.1000 வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாவட்ட போட்டிகள் ஜன. 30 முதல் பிப்.1 வரை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கும்.

மாவட்ட அளவில் ஓவியம், பெண்களுக்கான கோலப்போட்டி, மாற்றுத்திறனாளிகள், செவித்திறன், அறிவுசார் குறைபாடுடையோருக்கு100 மீட்டர் ஓட்டம், பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கு குண்டு எறிதல் போட்டி நடக்கிறது. முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.6000, இரண்டாம் இடத்திற்கு ரூ.4000, மூன்றாம் இடத்திற்கு ரூ.2000 வழங்கப்படும்.

மாநில அளவில் பெண்களுக்கான கபடி போட்டி, ஆண்களுக்கான 'ஸ்ட்ரீட்' கிரிக்கெட் போட்டி சென்னையில் பிப். 6 முதல் 8 வரை நடக்கிறது.

முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.75 ஆயிரம், 2ம் இடத்திற்கு ரூ.50 ஆயிரம், 3ம் இடத்திற்கு ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.

போட்டி நடக்கும் போது வீரர், வீராங்கனைகள் ஆதார், ரேஷன் கார்டு நகல், போட்டோ உடன் வரவேண்டும். அனைத்து போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். விளையாட்டு நடக்குமிடம் செல்வதற்கு போக்குவரத்து படி வழங்கப்படும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்தார்.

Advertisement