அதிகாலையில் மின்விளக்கு அணைப்பு இருளில் தத்தளிக்கும் ரயில் பயணியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், அதிகாலையில் மின் விளக்குகள் அணைக்கப்படுவதால், இருளில் பயணியர் பரிதவித்து வருகின்றனர்.

திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு, தினமும் அதிகாலை 5:30 மணிக்கு பல்வேறு பயணியர் பயணத்தை துவக்குகின்றனர். பணி காரணமாகவும், மருத்துவம், பல்வேறு இடங்களுக்கு செல்லவும், திருவள்ளூர், மணவாளநகர், காக்களூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர், அதிகாலை ரயிலில் பயணம் செய்ய வருகின்றனர்.

தற்போது, பனி காலமாக இருப்பதால், காலை 7:00 மணி வரை, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சூரிய வெளிச்சம் கிடைக்காமல் உள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும், அதிகாலை 6:00 மணிக்கு தானாக அணைந்து விடுகின்றன.

ஆனால், சூரிய வெளிச்சம் வராத நிலையில், விளக்குகள் அணைக்கப்படுவதால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், அதிகாலையிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் முதியோர், நடைமேடைகளில் போதிய வெளிச்சமின்றி, கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

எனவே, திருவள்ளூர் ரயில்வே நிர்வாகம், பனி காலத்தை கருத்தில் கொண்டு, சூரிய வெளிச்சம் வரும் வரை, ரயில் நிலைய நடைமேடைகளில் உள்ள மின் விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement