அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா

புதுடில்லி: “ஆயிரம் ஆண்டுகளில், 16 முறை தாக்குதல்களுக்கு உள்ளான போதிலும், குஜராத் சோமநாதர் கோவில் நித்ய சனாதன தர்மத்தின் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது. இது, அழிப்பவர்களை விட உருவாக்குவோரின் வலிமையே பெரியது என்பதைக் காட்டுகிறது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

டில்லி பான்சேரா பூங்காவில், மூன்றாவது சர்வதேச பட்டம் விடும் திருவி ழாவை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

நாட்டு மக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு மகர சங்கராந்தி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டாட்டம்



சூரியனை வழிபடும் இந்தப் பண்டிகை லோஹ்ரி, பிஹு, பொங்கல் என பல மாநிலங்களில் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இது, சூரிய பகவானின் உயிர் காக்கும் சக்தியைக் குறிக்கும் பண்டிகை.

பட்டம் விடும் திருவிழா நாட்டு மக்களை தலைநகர் டில்லியுடன் இணைக்கிறது. இந்த நிகழ்ச்சியை நம் நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் முன்னணி திருவிழாவாக மாற்ற டில்லி அரசும், டில்லி மேம்பாட்டு ஆணையமும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த விழாவை முழுமையான ஒரு திருவிழாவாக மாற்ற குழு அமைக்க வேண்டும்.

கடந்த, 1026-ல் கஜினி முகமது குஜராத் சோமநாதர் கோவில் மீது முதன் முறையாக தாக்குதல் நடத்தினார். ஆயிரம் ஆண்டுகளில் சோமநாதர் கோவில் மீது 16 முறை தாக்குதல் நடத்தி சூறையாடப்பட்டுள்ளது.

ஆனால், சோமநாதர் கோவில் இன்றும் கம்பீரமாகவும் வலிமையாகவும் பிரமாண்டமாகவும் நிற்கிறது. அதற்காகத்தான் சோமநாதர் சுயமரியாதை விழா சமீபத்தில் நடத்தப்பட்டது. இது, அழிப்பவர்களை விட உருவாக்குவோருக்கே வலிமை மிக அதிகம் என்பதை உணர்த்துகிறது.

கொடி பறக்குது



குஜராத் சோமநாதர் கோவில் நித்ய சனாதன தர்மத்தின் சின்னமாக விளங்குகிறது. நம் நாட்டு பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளின் அழியாத தன்மைக்கு இந்தக் கோவில் ஒரு சான்று. இந்த ஆண்டு, சோமநாதர் சுயமரியாதை ஆண்டாக நாடு முழுதும் கொண்டாடப்படும். சுதந்திரத்துக்குப் பின், சர்தார் வல்லபாய் படேல், ஜாம்நகர் மஹாராஜா, கன்னையா லால் முன்ஷி மற்றும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் சோமநாதர் கோவிலை பிரம்மாண்டமான மற்றும் கம்பீரமான கட்டமைப்பாக மீண்டும் கட்டியெழுப்பத் தீர்மானித்தனர்.

இப்போது, அதே இடத்தில் வானைத் தொடும் அளவுக்கு கொடி பறக்க அற்புதமான சோமநாதர் கோவில் கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ளது.

-ஆனால், சோமநாதர் கோவிலை சூறையாடிய கஜினி முகமது, முகமது பேகடா, அலாவுதீன் கில்ஜி ஆகியோர் உலக வரைபடத்தில் எங்குமே இன்று இல்லை.

சோமநாதர் சுயமரியாதைப் பெருவிழாவும், சோமநாதர் சுயமரியாதை ஆண்டும், நம் நாட்டின் கலாசாரத்தை அசைக்க முடியாததாகவும், உறுதியானதாகவும், அழியாததாகவும் மாற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா, அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா. மஞ்ஜிந்தர் சிங் சிர்சா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement