கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் 'ஸ்டிரைக்' அரசை கண்டித்து நேற்று துவக்கம்

தமிழக அரசைக்கண்டித்து, காலவரையற்ற வேலை புறக்கணிப்பை நேற்று துவக்கிய அரசு கலைக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி, கடந்த 1996ம் ஆண்டிலிருந்து பல காலகட்டங்களில் அரசு கலைக்கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

கவுரவ விரிவுரையாளர்களின், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இதைக்கண்டித்து, கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற வேலை புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று துவக்கினர்.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், கல்லுாரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகள் குறித்தும், தமிழக அரசைக்கண்டித்தும் கோஷமிட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நேற்று உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், 58 கவுரவ விரிவுரையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் கடந்த, 20 ஆண்டுகளாக, 30 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என நான்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் தெரிவித்தும், தமிழக அரசு உயர்கல்வித்துறை உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது:

யு.ஜி.சி., கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ரூ.57,800 சம்பளம் வழங்க அறிவுறுத்தியுள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும். பி.எப்., இ.எப்., உறுப்பு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு பிடிக்கப்பட்டது. இந்த நடைமுறையை அனைத்து அரசு கவுரவ விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை, தேர்தல் வாக்குறுதியாக வழங்கியவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறப்புத்தேர்வு வாயிலாக, கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற சட்டசபை அறிவிப்பும், கிடப்பில் போடப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

கோரிக்கை நிறைவேறும் வரை கல்லுாரியில் பாடம் மட்டுமே நடத்துவோம். இனி துறை மற்றும் கல்லுாரி சார்ந்த பிற பணிகளையும், அரசு சார்ந்த திட்டங்களான 'நான்முதல்வன் திட்டம், தமிழ்புதல்வன், மடிக்கணினி வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட மாட்டோம். மேலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, கூறினர்.




- நிருபர் குழு -:

Advertisement