வரியின்றி அமெரிக்காவுக்கு கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு: துணை ஜனாதிபதி நம்பிக்கை
சேலம் : ''அமெரிக்காவுடன் ஒரு புது புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும்போது, இங்கிருந்து ஜவுளி மட்டுமின்றி ஆம்பூரில் இருந்து தோல், கைவினைப்பொருட்களை, வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை விரைவில் உருவாக்குவோம்,'' என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார்.
சேலம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர் அருகே உள்ள, மத்திய அரசின் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லுாரியில், புதிதாக கட்டப்பட்ட கல்வி வளாகத்தை, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: கைத்தறி நெசவாளர்கள், அவர்களது பிள்ளைகளின் பயன்பாட்டுக்கு, கல்வி வளாகத்தை திறந்ததில் மகிழ்ச்சி. சேலத்தில் ஜவுளி துறையை காப்பாற்ற, இந்த வளாகம் உதவும். இன்றைய சந்ததியினருக்கு, எது தேவையோ அதை தயார் செய்யும் தொழில்நுட்பத்தை நமக்கானதாக்க வேண்டும். இந்த கல்லுாரிக்கு வந்து செல்ல, ரயில்வே கேட் தடையாக உள்ளதாக அறிகிறேன். சுரங்கப்பாதை அமைத்து தந்தால் தடையிருக்காது. அதை செய்து தருகிறோம்.
நெசவு தொழில் நசிவடையாமல் இருக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் வங்கதேசம், சீனா நாடுகளுடன், எளிதாக போட்டியிடும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக சேலத்தில் இருந்து இன்னும் இரு ஆண்டுகளில், ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி, 2 மடங்காக உயரும்.
அமெரிக்காவுடன் ஒரு புது புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாகும்போது, இங்கிருந்து ஜவுளி மட்டுமின்றி ஆம்பூரில் இருந்து தோல், கைவினைப்பொருட்களை, வரி இல்லாமல் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை, விரைவில் உருவாக்குவோம். ஜவுளி துறையினர், இக்கல்லுாரியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மேலும், 100 கோடி ரூபாய் செலவில் புது கட்டடத்தையும், மத்திய அரசு உருவாக்கித்தரும். ஜவுளித்துறையில் புது தொழில்நுட்பத்தை புகுத்த, நெசவாளர்கள் முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கல்லுாரியில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், கைத்தறி மேம்பாட்டு கமிஷனர் பீனா, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், அ.தி.மு.க.,வின், சேலம் தெற்கு எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கு; மார்ச் 7ல் வெளியாகிறது தீர்ப்பு
-
இஸ்ரேலை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்; அமெரிக்க ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
-
நான் பணத்தை அல்ல; நேர்மையை தான் சம்பாதித்தேன்: கெஜ்ரிவால்
-
காங்கிரசுக்கு ஓட்டுப்போட மக்களுக்கு விருப்பமில்லை: பிரதமர் மோடி
-
மாம்பழம் சின்னத்தை முடக்க தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் மனு
-
கருணை பணி தராதது ஏமாற்றுவதற்கு சமம்; அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி