கழிவுநீர் குளமாக மாறிய பெரிய கண்மாய்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள பெரிய கண்மாய் பராமரிப்பு இன்றி கழிவுநீர் குளமாகவும், ஆகாய தாமரைகள் வளர்ந்து சுகாதார கேடாகவும் உள்ள நிலையில், நீர்வளத்துறை இதைக் கண்டு கொள்வது இல்லை.

அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் 127 ஏக்கர் பரப்பளவில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் பெரிய கண்மாய் உள்ளது. ஒரு காலத்தில் நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கு பாசன வசதியும் தந்தது. அந்த காலத்தில் நேரடியாக கண்மாயில் தண்ணீர் எடுத்து குடிநீராக பயன்படுத்தி வந்தனர். அந்த அளவிற்கு தூய்மையாக இருந்த கண்மாய் நாளடைவில் பராமரிப்பு இன்றி போனது. ஆகாய தாமரைகள், சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.

நகரின் ஒட்டுமொத்த கழிவுநீரும், சாயப்பட்டறைகளின் கழிவுநீரும் கண்மாயில் விடப்படுகிறது. நல்ல மரங்கள் வளர்ந்து குளுகுளு சூழலில் இருந்ததால் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் இங்கு வந்து தங்கிச் செல்லும். தற்போது கண்மாய் துர்நாற்றமும் பாசமடைந்து கிடப்பதால் பறவைகள் இங்கு வருவது இல்லை.

நகரின் முக்கிய நீர் ஆதாரமான பெரிய கண்மாயை பராமரிப்பதில் நீர்வளத் துறை மெத்தனம் காட்டுகிறது. கண்மாய் முழுவதையும் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சீமை கருவேலம் மரங்கள் ஆகாய தாமரைகளை அகற்றி கண் மாய்க்கு சுத்தமான மழைநீர் வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

Advertisement