மருத்துவமனை அருகே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று

விருதுநகர்: விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்புறம் ரோட்டின் ஓரத்தில் செல்லும் வாறுகாலில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லுாரியாக 2021ல் தரம் உயர்ந்தது. இதற்கு 2022ல் இதன் விரிவாக்க கட்டடங்கள் கட்டப்பட்டது. இதன் படி மகப்பேறு மருத்துவமனையிலும் கூடுதல் மருத்துவ வசதி செய்யப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனை வெளிப்புறம் உள்ள வாறுகால் நீண்ட நாட்கள் பிரச்னையாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவை உயர்த்தப்பட்டு கழிவுநீர் கடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் இவை நிரம்பி வழிந்து ரோட்டின் ஓரங்களில் தேங்கி நிற்கிறது.

மருத்துவமனை அருகே என்பதால் தினசரி வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளின் உறவினர்களும் அதிகம் வந்து செல்கின்றனர். இதனால் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது. கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement